கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு தீ.. தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்…
கொடைக்கானல் – பழனி வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு தீ… தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் திணறல்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த வாரம் முதல் பகல் வேளையில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது, இதன் காரணமாக செடிகள், கொடிகள், மரங்கள், புற்கள், புல்வெளிகள் காய்ந்து வருகின்றன, இதன் காரணமாக ஆங்காங்கே வனப்பகுதி மற்றும் வருவாய் நிலங்கள், தனியார் தோட்ட பகுதிகளில் தொடர்ந்து காட்டு தீ பற்றி பரவி எரிந்து வருகிறது.
இந்த நிலையில் பழனி வனசரகத்திற்கு உட்பட்ட ஓடைகரை என்ற வனப்பகுதியில் காட்டு தீயானது கட்டுக்கடங்காமல் நேற்று மாலை முதல் தீ பற்றி எரிந்து வருகிறது, இந்த தீயை அணைப்பதில் 20க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர், ஆனாலும் காற்றின் வேகம் காரணமாக காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
இதே போன்று மாட்டுப்பட்டி, உப்புப்பாறை மெத்து, அடுக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் விவசாய தோட்டப்பகுதிகளில் காட்டு தீ பற்றி எரிந்து வருவதால் விவசாய பயிர்களும், பழ வகை மரங்களும் எரிந்து சேதமடைந்து வருகின்றன. இந்த காட்டு தீயால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர், மேலும் வனப்பகுதிகளில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டு தீயால் வனவிலங்குகள் நகர்ப்பகுதிக்கு இடம்பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது, மேலும் இந்த பகுதிகள் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
கொடைக்கானலில் கடந்த 4 நாட்களாக மச்சூர் வனப்பகுதிக்கு உட்பட்ட தோகைவரை வனப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த காட்டுத்தீ, நேற்று நள்ளிரவில் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது. மேலும் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கொழுமம் வனப்பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் எரிந்து வந்த காட்டு தீ நேற்று அணைந்தது..
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பச்சை பசேல் என காட்சியளித்த மலைமுகடுகள் தற்போது பரவி வரும் காட்டு தீயால் கருமையாகவும் பொலிவு இழந்தும் காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது…