திராவிட மாடல் ஆட்சி… பாஜக ஆட்சியை அசைத்துப் பார்க்கின்ற சக்தி மு.க.ஸ்டாலினுக்கு உண்டு – அமைச்சர் ரகுபதி
திராவிட மாடல் ஆட்சி தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்திய திருநாட்டில் கொண்டு வருவோம் என இந்த நாளில் சபதமேற்போம் நான் திராவிட மாடல் ஆட்சியை கையிலெடுத்து இருக்கின்றேன்; முன்னெடுத்து வருகின்றேன் என்று சொல்லும் ஒரு திராவிடத் தலைவனாக தமிழக முதலமைச்சர் திகழ்கிறார் என்று கூறியுள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பாஜக ஆட்சியை அசைத்துப் பார்க்கின்ற சக்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு என கூறியுள்ளார்.
புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் பாவேந்தர் தமிழியக்கம் பாசறை சார்பில் திமுக இலக்கிய அணி துணைத் தலைவர் கவிதைபித்தன் ஏற்பாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திராவிடர் திருநாள் எழுச்சி கவியரங்கம் மற்றும் பாராட்டு விழா வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்து ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஏழாவது மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு 18 தங்கம் 3 வெள்ளி 3 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகின்ற 24 முதல் இருபத்தி ஏழாம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தேசிய அளவில் 6 மாற்றுத்திறனாளிகள் தேர்வு பெற்று கலந்து எடுத்து அவர்களுக்கு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள போக்குவரத்து செலவுக்காக 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை வழங்கினர்.
இதன் பின்னர் விழாவில் பேசிய தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 10 மாத காலத்தில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்கள் பணியாற்றி தமிழகத்தில் யாரும் தர முடியாத ஒரு நேர்மையான ஆட்சியை தமிழகத்தில் தந்து கொண்டிருக்கிறார், அந்த அடிப்படையில் கேட்டதெல்லாம் கிடைக்க இருக்கிறது நம்முடைய புதுக்கோட்டை மாவட்டத்திற்கு, மேலும் புதுக்கோட்டை நகராட்சிக்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்து சேர்க்கின்ற பெருமை இருக்கிறது.
இதற்கு நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அதே வேளையில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமல்ல வெற்றி பெறாதவர்கள் ஒருங்கிணைத்து அரவணைத்து நாம் பணியாற்ற வேண்டும். இதையேத்தான் அமைச்சர் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ள நாகை மற்றும் மயிலாடுதுறையில் வெற்றி கூட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்களையும் அரவணைத்து நாம் கட்சிப் பணியாற்ற வேண்டும் என்று பேசினேன். அதையே இங்கும் எடுத்துக் கூறுகிறேன். இந்த விழா மேடையில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அளவில் நீச்சல் போட்டியில் கலந்து கொள்வதற்கு உதவி கேட்டுள்ளனர் அவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் செலவில் போட்டியில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படும்.
மேலும், தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் சார்பில் பல்வேறு உதவிகளும் அந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் செய்து கொடுக்கப்படும்அதேபோல் மாற்றுத் திறனாளிகள் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கம் பெற்று வந்ததற்கு பிறகு அவர்களுக்கு மாதமாதம் ஊக்கத்தொகை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் மேலும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு எதிர்காலத்தில் அவர்கள் பெறுகின்ற பதக்கத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்கும் தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாளைய தினம் தமிழக முதலமைச்சர் தமிழக விளையாட்டுத்துறை மூலமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் அளவில் புதிய கட்டிடங்களை திறந்து வைக்கவுள்ளார். எதிர்வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் தமிழக முதலமைச்சரிடத்தில் வெற்றியை சமர்ப்பிப்போம் என்று பேசினார்.
இதன் பின்னர் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திராவிட மாடல் ஆட்சி தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்திய திருநாட்டில் கொண்டு வருவோம் என இந்த நாளில் சபதமேற்போம் நான் திராவிட மாடல் ஆட்சியை கையிலெடுத்து இருக்கின்றேன் முன்னெடுத்து வருகின்றேன் என்று சொல்லும் ஒரு திராவிடத் தலைவன் ஆக தமிழக முதலமைச்சர் திகழ்கிறார்.
இன்றைக்கு தமிழனுடைய நாகரிகத்தையும் பண்பாட்டையும் முன் நிறுத்துவதற்கு தமிழ்ச் சமுதாயத்திற்காக குரல் கொடுப்பதிலும் தமிழனுடைய வாழ்வுரிமையை காப்பாற்றுவதற்காகவும் இன்றைக்கு புலம்பெயர்ந்த தமிழர் விழாவாக இருந்தாலும் அவர்களும் நம்முடைய சகோதரர்கள் தான் என்றும் அவர்களும் தொப்புள் கொடி உறவு தான் என்றும் அவர்களையும் காப்பாற்றக்கூடிய சகோதரத்துவம் உணர்வுடன் செயல்பட கூடிய ஒரு தலைவனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
மேலும், தனக்கென ஒரு இடத்தைப் பெற்று பெரும் தலைவனாக திகழ்கிறார். ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து இந்த 10 மாத காலத்தில் எத்தனையோ போராட்டம் எத்தனையோ பிரச்சனை ஆனால் எதையுமே கண்டு முகம் சுளிக்காமல் புன்முறுவலோடு ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார். தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அரசியலில் எப்படி ஒரு இடம் கிடைத்தது அதேபோல் பல மடங்கு இடத்தை அவரது வாரிசான நான் பெறுவேன் என சொல்லி உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இன்றைக்கு அகில இந்திய தலைவர்கள் பாராட்டுகிறார்கள், தமிழக மக்கள் பாராட்டுகிறார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் 20 ஆண்டுகளில் 30 ஆண்டுகளில் இனிமேல் தமிழகத்தில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆட்சியை அசைத்துப் பார்க்க தமிழகத்தில் எந்தக் கொம்பனும் பிறக்கவில்லை என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை தமிழக முதல்வர் தந்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு யார் யாரெல்லாம் தமிழகத்திற்கு வருகிறார்கள் காவி கொடியை பிடித்து கொண்டு வருகிறார்கள் காலூன்ற முடியுமா என, ஊன்றி ஊன்றி பார்க்கிறார்கள் ஆனால் பாவம் அவர்களால் ஊன்ற முடியாத இடம் இந்த இடம் என்று அவர்கள் மறந்துவிட்டார்கள்.
ஏனென்றால் இது திராவிட மண், இந்தியாவிலேயே ஒரு உணர்வு மிக்க மக்களை கொண்டிருக்கின்ற மண், இந்த மண் தமிழ் உணர்வு திராவிட உணர்வு கொண்டுள்ள இந்த மண்ணிலே நிச்சயமாக அவர்கள் எத்தனை கோடி ரூபாய் கொட்டி செலவு செய்தாலும், நிச்சயமாக இந்த ஆட்சியை அசைத்துப் பார்க்கின்றன சக்தி அவர்களுக்கு கிடையாது. ஆனால் அந்த ஆட்சியை அசைத்துப் பார்க்கின்ற சக்தி நம்முடைய தமிழக முதலமைச்சருக்கு உண்டு. நிச்சயமாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முனைப்போடு பணியாற்றுவார்.
அகில இந்திய கட்சிகளை ஒன்றிணைக்கும் தகுதி தலைமை நம்முடைய தமிழக முதலமைச்சருக்கு இருக்கிறது. அவரால்தான் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல முடியும். அப்படி ஒருங்கிணைத்து செல்லும் பொழுது, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று முழக்கத்திற்கு செயல்வடிவம் தரும் ஒரு முதலமைச்சராக இருப்பார்கள்.
இந்திய அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று சொன்னால் அது நம் முதலமைச்சரால் தான் முடியும். நிச்சயமாக தோழமைக் கட்சிகளை ஒன்றிணைத்து அவர் அதனை செய்து காண்பிப்பார். 2024 தேர்தல் பகல் கனவு கண்டு கொண்டிருப்பார்கள் நிச்சயமாக அவர்களுக்கு அது கனவாக முடியுமே தவிர, நினைவாக முடியாது. ஏனென்று சொன்னால் 4 மாநிலத்தில் தேர்தலில் ஜெயித்தவுடன் அவர்களுக்கு தலைகால் புரியவில்லை 4 மாநில தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமைக்க வில்லை அவர்கள் எல்லாம் யாரும் ஒருங்கிணைக்கவும் இல்லை, ஆனால் எதிர்க்கட்சிகளின் ஓட்டுக்கள் எல்லாம் ஒருங்கிணைத்து பார்த்தால் 50 சதவீதத்தை தாண்டிவிட்டது 50 சதவீதம் தாண்டிக் இருக்கின்ற ஓட்டுக்களை ஒருங்கிணைத்து பார்த்தால் அவர்களை ஓட ஓட விரட்ட முடியும்.
அந்த வேலைக்கு தான் நம்முடைய முதலமைச்சர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதுலயும் வெற்றி காண்பார் தலைவர் பொறுப்பேற்றதில் இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி சட்டமன்ற தொகுதியில் வெற்றி தற்போது நகராட்சித் தேர்தலில் வெற்றி.
வெற்றி மீது வெற்றி வந்து அவரை தேடி வரும். இனிமேல் அவருக்கு என்றைக்குமே தோல்வி கிடையாது. தமிழக முதலமைச்சருடைய கட்டத்தை பார்த்தவர்கள் எல்லாம் தற்போது தங்களுடைய கட்டத்தை பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் இனி உங்களுக்கு வேற எந்த இடமும் கிடையாது என்று நான் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் என்று பேசினார்.