பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெயத்து வங்கதேசம்.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை அடைந்துள்ளது வங்கதேசம். அதேசமயம், பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 18 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது.
ஹேமில்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. ஃபர்கனா 71 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் நஷாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேச அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாக அமைந்தது.
அதன்பின் விளையாடிய பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸில் தொடக்க வீராங்கனை சிட்ரா அமீன் 104 ரன்கள் எடுத்தார். எனினும் பாகிஸ்தான் அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. தொடக்க வீராங்கனைகள் 91 ரன்கள் வரைக்கும் கூட்டணி அமைத்தார்கள். 8 ஓவர்கள் மீதமிருந்தபோது 183/2 என வலுவான நிலையில் இருந்தது பாகிஸ்தான். எனினும் கடைசிக்கட்டத்தில் இதர பேட்டர்களால் இலக்கை ஒழுங்காக விரட்ட முடியாமல் போனது.
இதன்மூலம் உலகக் கோப்பை தொடரில் முதல்முறையாக விளையாடும் வங்கதேச அணி, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. எனினும் பாகிஸ்தான் அணி கடந்த 18 உலகக் கோப்பை ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. ஆடவர், மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகளில் 18 தொடர் தோல்விகளை எதிர்கொண்ட ஜிம்பாப்வேயுடன் பாகிஸ்தான் இணைந்துள்ளது. 1983 முதல் 1992 வரை ஜிம்பாப்வே அணி, 18 தோல்விகளை அடைந்தது குறிப்பிடத்தக்கது.