அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் அதிமுக சட்டமன்ற கொறடாவாகவும் உள்ளார். இவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
மைல்கல் பகுதியில் உள்ள எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி. வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, கோவை, நாமக்கல், திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, கேரளா ஆகிய பகுதிகளில் சுமார் 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, எஸ்.பி. வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அரசு டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீடு, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன் வீடு உட்பட சுமார் 60 இடங்களில் சோதனை நடைபெற்றது.