ஏர் இந்தியாவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் நியமனம்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. அதன் பிறகு ஏலத்தில் அதிக தொகை கேட்டதால் டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை டாடா குழுமத்திடம் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு முறைப்படி ஒப்படைத்தது. இதன் தொடர்ச்சியாக ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக இல்கர் ஐசி நியமனம் செய்யப்படுவதாக டாடா அறிவித்தது.

துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் இல்கர் ஐசி. ஏப்ரல் 1-ம் தேதி இல்கர் ஐசி பொறுப்பேற்க இருந்தார். அவரது நியமனத்துக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளப்பின. துருக்கி அதிபருக்கு நெருக்கமானவர் என்பதால் அவரது பணி நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கக்கூடாது என இந்தியாவில் கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து அவர் பதவியேற்க மறுத்து விட்டார். இந்தநிலையில் ஏர் இந்தியாவின் புதிய தலைவராக சந்திரசேகரன் இருப்பார் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை டாடா குழுமம் இன்று வழங்கியுள்ளது.

நடராஜன் சந்திரசேகரன் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் 1963-ம் ஆண்டில் பிறந்தவர். திருச்சியிலுள்ள என்.ஐ.டியில் பட்டப்படிப்பை முடித்தார். 1987-ம் ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணி செய்த அவர், தலைமை நிர்வாக அதிகாரி, நிர்வாக இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். அதன்பின்னர், அக்டோபர் 2016 இல் டாடா சன்ஸ் வாரியத்தில் அவர் சேர்ந்தார். ஜனவரி 2017 அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர் மற்றும் டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உட்பட பல்வேறு டாடா குழும நிறுவனங்களின் வாரிய தலைவராகவும் உள்ளார். 2009-17 வரை அவர் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.