ராஜபக்ச அரசுக்கெதிராக அணி திரண்ட மக்கள் அலை (Photo & Video)
“ராஜபக்ச குடும்ப அரசை விரட்டும் வரை ஓயோம்” என ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட சஜித் மற்றும் ஆதரவாளர்கள்
“மக்களை வதைக்கும் இந்தச் சூழ்ச்சிக்கார ராஜபக்ச அரசை – ராஜபக்ச குடும்பத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை ஜனநாயக வழியிலான எமது போராட்டம் தொடரும்.”
– இவ்வாறு சூளுரைத்தார் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அரசுக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் முன் இன்று நடைபெற்ற மாபெரும் ஆப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு சூளுரைத்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“தடைகளுக்கு மத்தியிலும் அச்சமின்றி, துணிவுடன் மக்கள் அணிதிரண்டுள்ளனர். கடந்த இரு வருடங்களில் மக்கள் அனைத்து வழிகளிலும் துன்பப்பட்டனர். இனியும் அந்தத் துன்பத்தை தாங்கிக்கொண்டிருக்க முடியாது.
மக்களை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்த சூழ்ச்சிக்காரர்கள்தான் ராஜபக்ச அரசு – ராஜபக்ச குடும்பம். அந்த ஆட்சியை விரட்டியடிக்கவே நாம் அணிதிரண்டுள்ளோம். அந்த இலக்கை அடையும்வரை அறவழியில் எமது போராட்டம் தொடரும்.
ஊழல் அற்ற ஆட்சியையே நாம் உருவாக்குவோம். எவருடனும் ‘டீல்’ இருக்காது. மக்களுடன்தான் எமக்கு டீல்” – என்றார்.