வெளிநாட்டினருக்கான விசா தடை நீக்கம்: மத்திய அரசு
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டினருக்கான விசா தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டினருக்கான விசா வழங்க மத்திய அரசு தடை விதித்தது. தற்போது நோய் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, பல்வேறு நாடுகள் விசாவுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. இந்த வரிசையில், இந்தியாவும் விசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கியுள்ளது.
156 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் 5 ஆண்டுகளுக்கான இ-சுற்றுலா விசாவிற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் நீண்ட கால (10 ஆண்டுகள்) சுற்றுலா விசாவுக்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.