மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம் ஜப்பானிய தூதுவரிடம் கையளிப்பு -மனோ கணேசன்.
மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம் ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷியிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியினால் கையளிக்கப்பட்டது. ஜப்பானிய தூதுவரின் இல்லத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கு பற்றி ஆவணத்தை தூதுவரிடம் கையளித்தனர்.
மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணத்துடன், மலையக கல்வி தொடர்பான கோரிக்கைகளும் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜப்பானிய அரசையும், மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி, அரசியல் துறை மற்றும் முதலாம் செயலாளர் தகேசி ஒசாகி, அரசியல் துறை ஆய்வாளர் கநா மொரிவகி ஆகியோர் பங்கு பற்றினர்.
மலையக தமிழர் எதிர்நோக்கும் சவால்கள், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம், ஐநா மனித உரிமை ஆணையகம் பற்றி கலந்துரையாடப்பட்டது. அதை தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களை பற்றியும் ஏனைய சமூகங்களை பற்றியும் ஓரளவு அறிந்துள்ளதாகவும், இனிமேல் மலைநாட்டு தமிழ் மக்களை பற்றி மென்மேலும் அறியவும், அவர்களுக்கு உதவிடவும் ஜப்பானிய அரசும், மக்களும் விரும்புவதாக ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி, தமுகூ தலைவர்களிடம் கூறியுள்ளார்.
இலங்கையில் வாழும் நான்கு பிரதான இனக்குழுக்களில், மலையக தமிழரையும் தனித்துவம் கொண்ட ஒரு இனக்குழுவினராக தாம் இனிமேல் குறித்துக்கொள்வதாகவும், ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் உறுதியளித்தார்.
ஐநா மனித உரிமை அறிக்கையில் மலையகம் பற்றி இன்னமும் முறையாக போதியளவு குறிப்பிடப்படாமை பற்றியும் தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி வினவினார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, தற்போது ஒரு அரசியல் தலைமையாக செயற்பட ஆரம்பித்துள்ளது. இந்த படிவரிசையில் நாம் மலையக விவகாரங்களை படிப்படியாக சர்வதேச மயப்படுத்தி வருகிறோம். அந்த அடிப்படையிலேயே மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படியே இந்த சந்திப்பு நிகழ்கிறது. ஏனைய சர்வதேச நட்பு நாடுகளின் பிரதிநிதிகளையும், ஐநா வதிவிட பிரதிநிதியையும் சந்திக்க நாம் தீர்மானித்துள்ளோம் என தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
ஜப்பான் எப்போதுமே இலங்கை மக்களால் பெரிதும் விரும்பப்படும் நட்பு நாடு என்ற முறையில் எமது மக்கள் தொடர்பில் ஜப்பானிய தூதுவரின் கருத்துகளை தாம் முழுமனதுடன் வரவேற்றதாகவும், அதேவேளை இலங்கை அரசுடன் இருக்கின்ற நட்புறவை பயன்படுத்தி, மலையக மக்களின் விவகாரங்கள் தொடர்பில் அக்கறையை அதிகரிக்கும்படி இலங்கை அரசை வலியுறுத்தும்படி தாம் ஜப்பானை கேட்டுக்கொண்டதாகவும், மலையக மக்கள் தொடர்பில் கல்வி வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கும்படி ஜப்பானிய அரசை கோரியதாகவும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.