உக்ரைனில் ரொட்டி வாங்க வரிசையில் நின்ற 10 பேர் சுட்டுக்கொலை.
உக்ரைனில் சமாதான பேச்சு வார்த்தைக்கு மத்தியிலும் போர் தீவிரம் அடைந்து வருகிறது.
போரின் 21-வது நாளான நேற்று தலைநகர் கீவில் 12 மாடிகளைக்கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷிய படைகள் பீரங்கி தாக்குதல் நடத்தின. இதில் கட்டிடத்தின் மேல்தளத்தில் தீப்பிடித்து எரிந்தது. அதன் அருகில் இருந்த மற்றொரு கட்டிடமும் பெருத்த சேதம் அடைந்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 நாள் ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக நகரம் முழுவதும் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நகருக்கு இது கடினமான, ஆபத்தான தருணம் என்று நகர மேயர் கூறினார்.
கீவின் புறநகரங்கள் மீதான தாக்குதலையும் ரஷிய படைகள் நேற்று தீவிரப்படுத்தின. குறிப்பாக வடமேற்கில் உள்ள புச்சா நகர் மற்றும் சைட்டோமைர் நோக்கிச்செல்லும் நெடுஞ்சாலையிலும் ரஷிய படைகள் சண்டையை தீவிரப்படுத்தி உள்ளன.
தலைநகரை போக்குவரத்து வசதிகளில் இருந்து துண்டிக்கவும், தளவாட திறன்களை அழிக்கவும் முயற்சித்து ரஷிய துருப்புகள் காய்களை நகர்த்தி வருகின்றன.
ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல்கள் நடத்தி வருவதால் தலைநகர் கீவை சுற்றிலும் 12 சிறுநகரங்கள் தண்ணீர் இன்றியும், உயிரை உறைய வைக்கிற குளிரில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான வெப்ப கருவிகள் இன்றியும் மக்கள் தவிக்கின்றனர்.
கீவ் நகருக்கு 80 கி.மீ. தொலைவில் உள்ள இவான்கிவ் நகரை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. பெலாரஸ் எல்லையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது என்று கீவ் பிராந்திய தலைவர் ஒலெக்சி குலேபா தெரிவித்தார்.
கீவ் பிராந்தியத்தில் இடைவிடாத ரஷிய தாக்குதலால் மழலையர் பள்ளிகள், அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள், குடியிருப்புகள், என்ஜினீயரிங் கட்டமைப்புகள் பெரும்பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
ரஷிய படைகளால் உக்ரைனிய பகுதிகளுக்குள் எளிதில் முன்னேற முடியவில்லை. ஆனால் நகரங்கள் மீது தொடர்ந்து பீரங்கி தாக்குதல்கள் நடத்துகின்றனர் என்று உக்ரைன் அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் பீட்டர் மவுரர், கீவ் நகருக்கு 5 நாள் பயணமாக வந்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘போரில் சிக்கியுள்ள மக்களுக்கு மிகப்பெரிய உதவிகள் தேவை. மக்கள் உதவிக்காக அழுகிறார்கள்’’ என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
கீவ் நகரில் குண்டுவீச்சு, பீரங்கி தாக்குதல், ஏவுகணை வீச்சு நடந்து வந்தாலும் இதற்கு மத்தியில் ஐரோப்பிய நாடுகளான போலந்து, செக் குடியரசு, சுலோவேனியா ஆகியவற்றின் பிரதமர்கள் நேற்று அதிகாலை கீவ் நகருக்கு வந்தனர். அவர்கள் உக்ரைனுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆதரவைத் தெரிவித்தனர்.
ரஷிய படைகள் சுற்றி வளைத்துள்ள செர்னிஹிவ் நகரில் ரொட்டிக்காக வரிசையில் நின்று கொண்டிருந்த உக்ரைன் மக்கள் மீது ரஷிய படைகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். குருவிகளை சுடுவதுபோல 10 பேரை சுட்டுக்கொன்றனர்.
இது கொடூரத்தின் உச்சமாக அமைந்துள்ளது. இதை கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் உறுதி செய்துள்ளது. இத்தகைய பயங்கரமான தாக்குதல்களை ரஷியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கண்டித்துள்ளது.
உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகருக்குள் நுழைவதற்கான ரஷிய படைகளின் முயற்சியை உக்ரைனிய படைகள் முறியடித்துள்ளதாக அதிபர் அலுவலகம் கூறியது. அந்த நகரில் 24 மணி நேரம் இடைவிடாத வான்தாக்குதலை ரஷியா நடத்தி உள்ளது. அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
ஒடெசா நகருக்கு தெற்கே உள்ள துஸ்லாவுக்கு அருகில் உள்ள உக்ரைனிய கடற்கரையில் நள்ளிரவில் ரஷிய போர்க்கப்பல்கள் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகளை நிறுவி உள்ளது.
உக்ரைன் மீதான போரில், 111 விமானங்கள், 160 ஆளில்லா விமானங்கள், 1,000 டாங்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷிய ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்தார்.