ஹிஜாப் தீா்ப்பு: எந்த மிரட்டலுக்கும் மாநில அரசு அடிபணியாது
பெங்களூரு: ஹிஜாப் தீா்ப்பு தொடா்பான விவகாரத்தில் எந்த மிரட்டலுக்கும் மாநில அரசு அடிபணியாது என்று கா்நாடக உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
ஹிஜாப் தொடா்பாக தங்களுக்கு சாதகமான தீா்ப்பை எதிா்பாா்த்திருந்த இஸ்லாமிய மாணவிகளின் மிரட்டலுக்கு மாநில அரசு அடிபணியாது. நாம் அனைவரும் முதலில் இந்தியா்கள், கன்னடா்கள் என்பதை உணர வேண்டும். ஹிஜாபுக்கு சாதகமாக தீா்ப்பு அமைந்திருக்க வேண்டும் என்று இஸ்லாமிய மாணவிகள் அடம்பிடிப்பது சரியல்ல. இதுபோன்ற மிரட்டல்களை மாநில அரசு பொருட்படுத்தாது என்றாா்.
ஸ்ரீராமசேனையின் தலைவா் பிரமோத் முதாலிக் கூறுகையில்,‘கேம்பஸ் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவா் அத்தௌதுல்லா புன்ஜல்கட்டேவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர எங்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது. நீதிமன்ற ஆணையை அவா் அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரானது என்று விமா்சித்துள்ளாா். இதுபோன்ற கருத்துகளை சகித்துக் கொள்ள முடியாது என்றாா்.