நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும்
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா கேட்டுக்கொண்டார். நியூட்ரினோ ஆய்வுக் கூட திட்டத்தால் சுற்றுச்சூழல், வளமான வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுவது மட்டுமின்றி, பாறை வெடிப்புகளும், மேற்கூரை இடிந்து விழும் பிரச்னையும் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அறிக்கையை மேற்கொள் காட்டி மாநிலங்களவையில் புதன்கிழமை அவர் பேசியதாவது: தேனி, போடி மேற்கு தொடர் மலைப்பகுதிகளில் நியூட்ரினோ திட்ட ஆய்வகத்தின் சோதனைகள் பூமிக்கு அடியில் செய்யப்பட திட்டமிடப்படுகிறது. இந்தக் கட்டமைப்பு செயல்பாடுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் கூறியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், தேனி மாவட்டத்தின் வனவிலங்குகள், பல்லுயிர் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் வகையில், இந்த நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார். இந்தத் தளம் மதிகெட்டான் – பெரியார் புலிகள் வழித்தடத்தின் கீழ் வருகிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள போடி மலை மேற்கு காப்புக்காடுகளுக்கு உள்பட்ட பகுதியில் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மேகமலை புலிகள் காப்பகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுடன் இணைக்கப்பட்டு, மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதும் கம்பம் பள்ளத்தாக்கு வரை மரபணு பரவலுக்கும் முக்கியமாக உள்ளது. புலிகள் மட்டுமின்றி, சில அரிய வகை பாலூட்டிகளும், உடும்புகள், ஊர்வன மற்றும் நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்டவையும் உள்ளன. எனவே, அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் வளமான வனவிலங்குகளைக் காப்பாற்றும் நோக்கில் இந்த முன்மொழிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.