ஒரு பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து….
இலங்கைக்கு தேவையான கோதுமை மா, சீனி, அரிசி மற்றும் மருந்து பொருட்களை கொள்முதல் செய்வதற்காக இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் இன்றையதினம் கைச்சாத்திடப்படவுள்ளது. இலங்கையில் இம்மாதம் இடம்பெறவுள்ள 5 ஆவது ஒம்புட்ஸ்மன் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துக்கொள்ளுமாறு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும், இந்திய பிரதமரிற்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கைக்கான நிதியுதவி மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவு நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் அழைப்பிற்கமைய நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை மாலை புதுடெல்லியை சென்றடைந்தார்.
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ,நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல மற்றும் நிதியமைச்சரின் பாரியார் புஸ்பா ராஜபக்ஷ ஆகியோரை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட வரவேற்றார்.
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஸவர்தன் ஸ்ரிங்லாவிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை காலை புதுடெல்லியில் இடம்பெற்றது. இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட,நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்,இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு பிரதி ஆலோசகர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி ஆகியோரை நிதியமைச்சர் சந்தித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும்,நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை மாலை புதுடெல்லியில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது இலங்கைக்கான நிதி உதவிகள்,இரு நாடுகளுக்குகிடையிலான இராஜதந்திர உறவு நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கைக்கு தேவையான கோதுமை மா, சீனி, அரிசி மற்றும் மருந்து பொருட்களை கொள்முதல் செய்வதற்காக இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஒப்பந்தங்களை நிறைவு செய்வதற்காக நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வமாக விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நிதியமைச்சருக்கும், இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதிக்கும் கடந்தவாரம் இடம்பெற்ற தொலைப்பேசி உரையாடலை தொடர்ந்து நிதியமைச்சரின் இந்திய விஜயம் உறுதிப்படுத்தப்பட்டது.
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த டிசெம்பர் மாதம் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். எரிபொருள், அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்காக இந்தியா இலங்கைக்கு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான குறுகிய மற்றும் நடுத்தர திட்டங்களை செயற்படுத்தும் முறைமையை இலகுப்படுத்தல் வழிமுறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டன.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு உணவு ,மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் வகையில் கடன்வரி நீடிப்பை கருத்திற்கொண்டு அவசர உணவு மற்றும் சுகாதார சேவைத்திட்டம், எரிபொருள் இறக்குமதி செய்யும் எரிசக்தி பாதுகாப்பு திட்டம், திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை நவீனமயப்படுத்தல் நடைமுறையில் உள்ள நிலுவை தொகை சிக்கல்களை தீர்ப்பதற்காக இலங்கைக்கு உதவுவதற்கு நாணய பரிமாற்றத்தின் ஊடாக சலுகை வழங்கல் மற்றும் பொருளாதார முன்னேற்றம், தொழில்வாய்ப்பை விரிவுப்படுத்தும் வகையில் இலங்கையில் பல்வேறு துறைகளில் இந்திய முதலீடுகளை இலகுப்படுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. அவை குறுகிய மற்றும் நடுத்தர கால ஒத்துழைப்பிற்கான தூண்கள் என கருதப்படுகிறது.
எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியா கடந்த மாதம் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது. தற்போதைய விஜயத்தை தொடர்ந்து இலங்கை இந்தியாவிடமிருந்து மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளது.