புனித் ராஜ்குமார் இறுதியாக நடித்த ‘ஜேம்ஸ்’ திரைப்படம் வெளியானது.
மறைந்த நடிகர் டாக்டர் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் இளைய மகன் புனித் ராஜ்குமார். கன்னடத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பால் தனது 46-வது வயதில் திடீரென மரணம் அடைந்து இருந்தார். புனித் ராஜ்குமாரின் மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அவரது உடல் கோரகுண்டேபாளையாவில் உள்ள கன்டீரவா ஸ்டூடியோவில் அடக்கம் செய்யப்பட்டு இருந்தது. அன்று முதல் அவரது உடலுக்கு இன்று வரை தினமும் ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புனித் ராஜ்குமார் 46 படங்களில் நடிகராக நடித்து இருந்தார். அவரது 47-வது படம் ‘ஜேம்ஸ்’ ஆகும். இது தான் அவர் கடைசியான நடித்த படம் ஆகும். இந்த திரைப்படம் மார்ச் 17-ந் தேதி (அதாவது நேற்று) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இனிமேல் நேரில் காண முடியாத புனித் ராஜ்குமாரை திரையிலாவது கண்டுவிட வேண்டும் என்று ரசிகர்கள் ஜேம்ஸ் திரைப்பட தேதியை எதிர்பார்த்து ஆர்வத்துடன் காத்து இருந்தனர். இதனால் ஜேம்ஸ் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.
ரசிகர்கள் ஆர்வம், பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான நேற்று ஜேம்ஸ் திரைப்படம் வெளியானது. கர்நாடகத்தில் 500 தியேட்டர்களில் இந்த படம் வெளியானது. கன்னடம் தவிர தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இந்த படம் சுமார் 3,500 தியேட்டர்களில் வெளியாகி இருந்தது. திரையில் புனித் ராஜ்குமாரை பார்த்ததும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்தனர். சில ரசிகர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
‘புனித்துக்கு ஜே, அப்புக்கு ஜே’ என்று கோஷங்கள் எழுப்பினர். இந்த சத்தம் விண்ணை பிளக்கும் அளவுக்கு இருந்தது. ஜேம்ஸ் திரைப்படம் வெளியாவதையொட்டி நேற்று முன்தினம் இரவு முதலே தியேட்டர்களில் புனித் ராஜ்குமார் ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு கட்-அவுட்டுகள் கட்டி பாலாபிஷேகம் செய்தனர். கட்-அவுட்களுக்கு மாலை அணிவித்தும், தேங்காய் உடைத்தனர். மேலும் மேள, தாளத்துடன் இரவு முழுவதும் நடனமாடி மகிழ்ந்தனர்.
ஜேம்ஸ் திரைப்படம் வெளியிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் இருக்கைகள் நிரம்பி வழிந்தன. அடுத்த 3 நாட்களுக்கு டிக்கெட்டுகள் முழுமையாக விற்று விட்டன. டிக்கெட் கிடைக்காததால் சில ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தியேட்டருக்குள் ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு செல்ல முயன்றனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடியும் நடத்தி இருந்தனர். ெபங்களூரு மட்டுமின்றி கர்நாடகம் முழுவதும் நேற்று ஜேம்ஸ் படம் வெளியானதையொட்டி தியேட்டர்களில் அவரது ரசிர்கள் திருவிழா பேல் கொண்டாடினார்கள்.
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். பிறந்தநாளையொட்டி புனித் ராஜ்குமார் இறுதியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படம் நேற்று வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பிறந்தநாளையொட்டி பெங்களூரு கோரகுண்டேபாளையா கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு ஏராளமான ரசிகர்கள் வருகை தந்தனர்.
அவர்கள் நினைவிடம் மீது மலர் தூவி வழிபட்டனர். கன்டீரவா ஸ்டூடியோவுக்கு வந்த புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள், பொதுமக்கள் என சுமார் 1 லட்சம் பேருக்கு, டாக்டர் ராஜ்குமாரின் தீவிர ரசிகரான லட்சுமி நாராயணா என்பவர் அன்னதானம் வழங்கினார்.
புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளையொட்டி நேற்று பெங்களூரு ஜக்கூரில் உள்ள விமான பயிற்சி பள்ளியின் ஓடுதளத்தில் ‘ஹேப்பி பர்த்-டே பவர் ஸ்டார்’ என்ற வாசகம் அடங்கிய பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
பின்னர் அந்த பேனரை இறக்கையில் கட்டி கொண்டு சிறிய ரக விமானம் ஒன்று வானில் பறந்து வட்டமிட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
புனித் ராஜ்குமாருக்கு நேற்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளையொட்டி ஜேம்ஸ் திரைப்படம் வெளியானது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் இமாசல பிரதேசத்தில் உள்ள மவுண்ட் எவரெஸ்ட் மலைக்கு மலையேற்றம் சென்ற பெங்களூருவை சேர்ந்த புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் மலை உச்சியில் நின்று கொண்டு கேக் வெட்டி புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளை கொண்டாடினர்.
மேலும் புனித் ராஜ்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்ததுடன், ஜேம்ஸ் திரைப்படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியான திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி நடிகர்-நடிகைகள் சிலரும் தியேட்டருக்கு வந்து பார்த்தனர். அதுபோல ஜேம்ஸ் திரைப்படத்தின் நடிகை பிரியா ஆனந்த்தும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்தார்.
படம் பார்த்துவிட்டு காரில் ஏறிய அவர் புனித் ராஜ்குமாரை நினைத்து கண்ணீர்விட்டு அழுதார். இதுபோல நடிகை மிலானா நாகராஜூம் புனித் ராஜ்குமாரை நினைத்து அழுதார்.