பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கிய அஸ்வின்!
மன்கட் ரன் அவுட்டை, முறையான ரன் அவுட் என எம்சிசி அறிவித்த நிலையில், பந்துவீச்சாளர்களுக்கு ரவிச்சந்திரன் அஷ்வின் அறிவுரை வழங்கியுள்ளார்.
பந்துவீச்சு முனையில் நிற்கும் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் பந்துவீசும் முன்பே, ரன் ஓட வசதியாக க்ரீஸை விட்டு விலகி நின்று, பவுலர் அவரை ரன் அவுட் செய்தால் அது மன்கட் ரன் அவுட் என்றழைக்கப்பட்டது. ஆட்டத்தின் ஸ்பிரிட்டுக்கு எதிரானது என்ற கருத்து பரவலாக இருப்பதால், மன்கட் ரன் அவுட் பெரும்பாலான பவுலர்கள் செய்யமாட்டார்கள்.
ஆனால் 2019 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டனான ரவிச்சந்திரன் அஷ்வின் மன்கட் ரன் அவுட் செய்தார். ஆனால் அஸ்வினின் செயல் தவறானது என்று பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அஸ்வினுக்கு சிலர் ஆதரவும் அளித்தனர். ஆனால் அஸ்வின் தான் செய்தது விதிகளுக்குட்பட்டதுதான் என்பதில் உறுதியாக இருந்தார்.
இப்போது எம்சிசி மன்கட் ரன் அவுட்டை முறையான ரன் அவுட் என அறிவித்தது. இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ள அஸ்வின் பவுலர்களுக்கு அறிவுரை ஒன்றையும் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அஸ்வின், “பந்துவீச்சு முனையில் உள்ள வீரர் க்ரீஸை விட்டு நகர்ந்தால் ரன் அவுட் செய்வது நியாயமற்றது என்று கூறினர். ஆனால் பந்துவீசுவதற்கு முன்பாக க்ரீஸை விட்டு நகர்வதுதான் அநியாயமானது. மன்கட் ரன் அவுட் என்று இருந்தது, இப்போது முறையான ரன் அவுட்டாக மாற்றப்பட்டுள்ளது. பந்துவீச்சு முனையில் நிற்கும் வீரர் பந்துவீசும் முன் க்ரீஸை விட்டு நகர்வதுதான் தவறு என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.
நமது பேட்ஸ்மேன்களும் அப்படி செய்வார்கள் என்பதால் மன்கட் ரன் அவுட் செய்ய பவுலர்கள் தயங்கினர். எனது அன்பிற்குரிய சக பவுலர்களே, தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். பவுலிங் முனையில் நிற்கும் வீரர் எடுத்து வைக்கும் ஒரு கூடுதல் அடி, உங்கள் கெரியரையே கூட பாதிக்க நேரிடும்.
அந்த வீரர் வைத்த ஒரு அடியால் சிங்கிள் எடுத்து மறுமுனைக்கு சென்றால் சிக்ஸர் அடிக்கக்கூடும். அதே அந்த சிங்கிள் ஓடாவிட்டால், பேட்டிங் ஆடும் வீரர் அவுட்டாகியிருக்க நேரும். இதனால் ஏற்படும் தாக்கம் உங்கள் கெரியரில் பின்னடைவாகக்கூட அமைய நேரிடும். எனவே தாக்கம் கடுமையானதாக இருக்கும். அதனால் பவுலர்கள் ரன் அவுட் செய்ய தயங்காதீர்கள்” என்று தெரிவித்தார்.