இந்திய கடனுதவியில் நாளை 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் – வலுசக்தி அமைச்சு.
இந்திய கடனுதவி திட்டத்தின் அடிப்படையில் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் வாரமளவில் எரிபொருள் விநியோக கட்டமைப்பு சீர்செய்யப்படும் எனவும் வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உணவு பொருட்கள் ,மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியா கடந்த மாதம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியிருந்தது.அதனை தொடர்ந்து 40 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலை இந்தியா கடந்த மாதம் 15ஆம் திகதி இலங்கைக்கு வழங்கியது.
இலங்கையில் வெளிநாட்டு கையிருப்பு தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து எரிபொருள்,எரிபொருள் உள்ளிட்ட பிரதான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பொது மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்னிலையில் நாளாந்தம் பலமணித்தியாலங்கள் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இலங்கைக்கு தேவையான 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் இந்தியா வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் நாளை நாட்டை வந்தடையும்.
அயலகத்திற்கு முன்னுரிமை எனும் கொள்கைக்கமைய இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. தேசிய எரிபொருள் விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமை எதிர்வரும் வாரத்திலிருந்து வழமை நிலைக்கு திரும்பும், தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் பெற்றுக்கொள்வதை பொது மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என வலுசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.