இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
இலங்கையின் பொருளாதார ஸ்தீரத்தன்மை மற்றும் கடன்களில் இருந்து மீள்வதற்கு நம்பகமான மற்றும் பொருத்தமான மூலோபாயத்தை செயற்படுத்துவதற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார தன்மையினை ஸ்தீரப்படுத்தல்,பொருளாதார மேம்பாட்டிற்காக செயற்படுத்த வேண்டிய முக்கிய விடயங்களை செயற்படுத்துவததன் அவசர தேவையை சர்வதேச நாணய நிதியம் எடுத்துரைத்துள்ளது. இலங்கையுடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்படும் சகல ஆலோசனைகளையும் விவாதிக்க தயாராகவுள்ளோம்.
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியம் அண்மையில் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. வெளிநாட்டு கையிருப்புக்களை ஸ்தீரப்படுத்திக்கொள்ளல்,சந்தை வசதிகளை விரிவுப்படுத்தல்,நிர்வாக முறைமையை சீர்செய்யல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளது.இலங்கையுடன் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சுவார்த்தை இணக்கப்படான தன்மையில் உள்ளதாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனாதிபதியை சந்தித்து இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய மீளாய்வு மற்றும் தீவு நாடுகளின் பொருளாதார மதிப்பீடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் சந்திப்பை தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் சாதக மற்றும் பாதக காரணிகளை ஆராய்ந்து நிதியத்துடன் இணக்கமாக செயற்பட தீர்மானித்துள்ளதான ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாட்டு கடந்த புதன்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது உறுதியளித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ளாமல் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார்.ஆசிய நாடுகளிடமிருந்து பரஸ்பர பரிமாற்றல் ஊடாக அரசாங்கம் கடன்களை ஆரம்பத்தில் பெற்றுக்கொண்டது. சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் இருவேறுப்பட்ட நிலைப்பாடு காணப்பட்டது.
பொருளாதார நிலைமை தீவிரமடைந்துள்ள நிலைமையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியான சுதந்திர கட்சி உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை தீவிரமடைந்து வருவதால் அரசாங்கம் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியினை பெற்றுக்கொள்ள வேண்டும். பரஸ்பர கடன் பரிமாற்றல் முறைமை ஊடாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடாவிடின் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமான நெருக்கடியினை எதிர்க்கொள்ளும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஜனவரி மாதம் முதல் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.
சர்வதேச நாணய நிதியப்பிரதிநிதிகள் குழுவின் இலங்கை குறித்த வருடாந்த மதிப்பீட்டு அறிக்கை கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி அதன் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
பொதுக்கடன்களில் ஏற்பட்டிருக்கும் மிகையான அதிகரிப்பு, வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சி எதிர்வரும் ஆண்டுகளுக்கான பாரிய நிதித்தேவை உள்ளடங்கலாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதியம்இ நுண்பாகப்பொருளாதார உறுதிப்பாடு மற்றும் கடன்களின் நிலைபேறானதன்மை ஆகியவற்றை அடைந்துகொள்வதற்கான செயற்திறன்மிக்க பொறிமுறையொன்றை இலங்கை உடனடியாக நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
பணவீக்கமானது இவ்வாண்டு ஜனவரி மாதம் 14 சதவீதம் வரை அதிகரித்ததுடன் எதிர்வரும் காலாண்டுகளிலும் பணவீக்கம் இரு இலக்கங்களிலேயே தொடர்ந்து பதிவாகும். கடந்த 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து கேள்வி மற்றும் நிரம்பல் ஆகிய இரு பக்கங்களிலிருந்தும் பணவீக்கத்தின் மீதான அழுத்தமொன்று தோற்றம்பெற்றிருப்பது இதற்கான காரணமாக அமைந்துள்ளது.
நிதி மற்றும் மீள்செலுத்துகைக்கான நிதித்தேவைப்பாடுகள் பூர்த்திசெய்யப்படும் வரையில் இறக்குமதி மற்றும் தனியார் கடன்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்களவிலான சுருக்கத்தையோ அல்லது ஸ்திரமற்ற நாணயநிலையையோ எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படலாம் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதார நிலைமை மோசடைந்துள்ள பின்னணியில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்க்ஷ கடந்த புதன் கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளல் மற்றும் கடன் செலுத்தல் குறித்து சர்வதேச நிதி நிறுவனங்களுடனும்,நட்பு நாடுகளுடனும் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் சாதக மற்றும் பாதக காரணிகளை ஆராய்ந்து நிதியத்துடன் இணக்கமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க எதிர்வரும் மாதம் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமெரிக்கா -வொஷிங்டன் செல்லவுள்ளதாக அரசாங்க தரப்பில் குறிப்பிடப்படுகிறது.