தைவான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன போர் விமானங்கள்..
தைவான் நாட்டில் தொடர்ந்து சீன ராணுவ விமானங்கள் நுழைந்து அத்துமீறி வருகின்றன. ஏற்கனவே இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ஒரே நாளில் தைவானின் எல்லைக்குள் ஜனவரி 23 அன்று 39 சீன விமானங்கள் ஊடுருவி உள்ளன.
இந்த ஊடுருவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் குண்டுவீச்சு விமானம் நேற்று மீண்டும் தங்கள் நாட்டின் வான்வெளியில் நுழைந்ததாக தைவான் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
தைவானின் நாட்டின் வான் பாதுகாப்பு எல்லைக்குள் (ADIZ) சீனாவை சேர்ந்த இரண்டு போர் விமானங்களும், இரண்டு குண்டுவீச்சு விமானங்களும் நேற்று நுழைந்தன.
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் ஷென்யாங் ஜே-11 மற்றும் ஷென்யாங் ஜே-16 போர் விமானங்கள் மற்றும் இரண்டு சியான் எச்-6 குண்டுவீச்சு விமானங்கள் காணப்பட்டன.
சீன விமானத்தை உடனடியாகத் தங்கள் நாட்டிற்கு திரும்பும்படி வானொலி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.
இந்த புலனாய்வு விமானத்தின் செயற்பாடுகளை கண்காணிக்க வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை பயன்படுத்தினோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் தொடர்ந்து நீடிக்கிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை ரஷியா ஏற்கனவே கைப்பற்றி இருந்தாலும் தலைநகர் கீவை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் ரஷிய ராணுவம் ஈடுபட்டுவருகிறது.
அதே நேரத்தில் தைவான் எல்லைக்குள் சீனாவின் தொடர் அத்துமீறல்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.