உக்ரைன் தாக்குதலில் புதின் களமிறக்கிய.. அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை.
உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மிகத் துல்லியமாகத் தாக்குதல் நடத்தக் கூடிய அதிநவீன விமானத்தை ரஷ்யா களமிறக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர், தொடர்ந்து 4ஆவது வாரமாக இன்றும் நீட்டிக்கிறது. பல பகுதிகளில் ரஷ்யா ராணுவத்தை முன்னேற விடாமல் உக்ரைன் வீரர்கள் ஸ்தம்பிக்கச் செய்துள்ளனர்.
ரஷ்ய அதிபர் புதினின் இந்தப் போர் நடவடிக்கை உலக நாடுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உக்ரைன் மீது உலகின் பல முக்கிய நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன.
இருப்பினும், இந்தப் போர் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. அதேபோல மறுபுறம் போர் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளிடையே அமைதிப் பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாகக் கடந்த மார்ச் 10ஆம் தேதி இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் துருக்கி நாட்டில் சந்தித்துப் பேசி இருந்தனர். இருப்பினும், இதில் உடன்பாடு எதுவும் எட்டப்பட்டதாகத் தெரியவில்லை. அதேபோல ரஷ்ய ராணுவத்தைக் குறி வைத்தும் உக்ரைன் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல பகுதிகளில் உக்ரைன் ராணுவத்தால் முன்னேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் ராணுவத்தை முறியடிக்க ரஷ்யா அதிநவீன ஏவுகணை ஒன்றைப் போரில் களமிறக்கி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய ராணுவம் முதல்முறையாக கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி மேற்கு உக்ரைனில் உள்ள ஆயுத சேமிப்பு தளத்தை அழித்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற அதிநவீன துல்லிய தாக்குதல் ஆயுதத்தைப் பயன்படுத்துவதை ரஷ்யா இதற்கு முன் ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் உக்ரைனில் கின்சல் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களைப் பயன்படுத்தியதை ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைனின் இவானோ-பிரான்கிவ்ஸ்க் பகுதியில் உள்ள டெலியாட்டின் கிராமத்தில் உள்ள ராணுவ தளத்தை ஹைப்பர்சோனிக் ஏரோபாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கி அழித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தத் தாக்குதல் தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பிய போது, ரஷ்ய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பதில் கூற மறுத்துவிட்டார்.
இந்த கின்சல் ஏவுகணை ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. மேலும், வான் பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்கக்கூடும் திறன் கொண்டதாகும். பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட இந்த ஏவுகணையால் துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும். ரஷ்ய அதிபர் புதினுக்கு பிடித்த ஆயுதமாக அறியப்படும் இந்த கின்சல் ஏவுகணையை அதிபர் புதின் போருக்கான சிறந்த ஆயுதம் என்றே குறிப்பிடுகிறார். கடந்த 2018ஆம் ஆண்டில் ரஷ்யா அறிமுகப்படுத்தி அதிநவீன ஆயுதங்களில் முக்கியமானது கின்சல் ஏவுகணையாகும்.