கொரோனா 4ம் அலை பரவ வாய்ப்பு.. விரைந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்: ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா 4 ஆம் அலை பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதால் விரைந்து அனைவரும் இரண்டு தவணைத் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 25 வது மெகா தடுப்பூசி முகாம் குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் நடைபெற்ற 25வது மெகா தடுப்பூசி முகாமில் 5 லட்சத்து 53 ஆயிரத்து 459 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
அதேபோல், தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 5 கோடியே 32 லட்சம் நபர்கள் மொத்தமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர், 4 கோடிக்கும் மேற்பட்டோர் 2 இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர் என்றும் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 92 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 80 சதவீதம் இரண்டாம் தவணை செலுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் 12- 14 வயதுடையவர்கள் 4.29 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் 51 லட்சம் நபர்கள் தற்போது வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளதாகவும், அதேபோல் 1.34 கோடி நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது என்றும் பிற நாடுகளில் தொடர்ந்து கொரோனா 4ஆம் அலை பரவும் சூழ்நிலை உள்ளதால் கொரோனா தோற்று விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் மற்ற நாடுகளைப் போல் நாமும் கொரானா தொற்றால் அவதிப்படும் சூழ்நிலை உருவாகும் என்றும் கூறினார்.
மேலும் வரும் நாட்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு தேடி தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற உள்ளது என்றும், மேலும் கடந்த ஆண்டில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அடிதடி உள்ளிட்டவைகள் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிலையில், தற்போது தடுப்பூசி அதிக அளவில் கையிருப்பில் இருந்தாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்களில் சிலர் தயக்கம் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பெரும்பாலும் முககவசம் அணிவதை தற்பொழுது மக்கள் மறந்து வருவதாக கூறிய அவர் தமிழகத்தில் கொரோனா 4ஆம் அலை பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதால் நோய் தொற்று நோய் பரவலை தடுக்க முகக் கவசம் அணிதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் போன்ற நடவடிக்கைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.