மருத்துவர் சண்முகம் சுப்பையா கைது விவகாரம்: நீதிமன்றத்துக்கு மூதாட்டி மிரட்டி அழைத்து வரப்பட்டாரா?
சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு எதிர்வீட்டில் குடியிருந்த மூதாட்டி வீட்டின் முன் சிறுநீர் கழித்த விவகாரத்தில் கீழ்பாக்கம் புற்றுநோய் சிகிச்சை தலைமை மருத்துவரும், அகில பாரத வித்தியார்த்தி பரிசத் எனப்படும் ABVP அமைப்பின் முன்னாள் தேசிய தலைவருமான சண்முகம் சுப்பையாவை ஆதம்பாக்கம் போலீசார் இன்று கைது செய்தனர்.
2020ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த இந்த சம்பவத்தில் அப்போதே சிசிடிவி காட்சிப்பதிவுகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவரும் ABVP அமைப்பின் முன்னாள் தேசிய தலைவருமான சண்முகம் சுப்பையா மீது ஆதம்பாக்கம் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட மூன்று பிரிவின் கீழ் கைது செய்தனர்.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது மருத்துவர் சண்முகம் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சண்முகம் சுப்பையாவை ஆதம்பாக்கம் போலீசார் ஆலந்தூர் மகிளா கோர்ட் மேஜிஸ்ட்ரேட் வைஷ்ணவி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட மருத்துவர் சண்முகம் சுப்பையாவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது திடீரென சண்முகம் சுப்பையா தரப்பினர் புகார்தாரரான மூதாட்டியை போலீசாருக்கே தெரியாமல் அழைத்து வந்து மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
மூதாட்டியும் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில், “மருத்துவர் சிறுநீர் கழித்தது உண்மை. கோழிக்கறி வீசியது உண்மை” எனக் கூறியுள்ளார். மேலும், தற்போது மருத்துவர் தன்னிடம் எந்த விதமான பிரச்சனையில் ஈடுபடவில்லை என கூறியுள்ளார்.
நடந்த சம்பவம் உண்மை என ஆதாரப்பூர்வமாக போலீசார் நிரூபித்ததால் மருத்துவர் சண்முகம் சுப்பையாவை வருகின்ற 31ம் தேதி வரை சிறையில் அடைக்க மகிளா கோர்ட் மேஜிஸ்ட்ரேட் வைஷ்ணவி உத்தரவிட்டார்.
பின்னர் கைது செய்யப்பட்ட மருத்துவர் சண்முகம் சுப்பையாவை ஆதம்பாக்கம் போலீசார் செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே போலீசார் விசாரணையில், மருத்துவர் சண்முகம் சுப்பையா தரப்பினர் மூதாட்டியை குடியிருப்பிலிருந்து மிரட்டி காரில் ஏற்றி நீதிமன்ற வளாகம் அழைத்து வந்தததும், மருத்துவர் சண்முகம் சுப்பையா தன்னிடம் எவ்வித பிரச்சையிலும் ஈடுப்படவில்லை என மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் தெரிவிக்க வேண்டும் என அவர்கள் மூதாட்டியிடம் கூறி அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது.