புதுசா பகீர் கிளப்பும் சீனா.. “லேசர் ஆயுதம்!” சாட்டிலைட்களை அழிக்க பயங்கர பிளான்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் விண்ணிலேயே செயற்கைகோள்களை அழிக்கும் லேசர் ஆயுதம் கண்டுபிடிப்பில் சீனா ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய சூழலில் ஒவ்வொரு நாடுகளும் விண்வெளி துறையில் சாதனை புரிந்து வருகின்றனர். இந்தியா உள்பட பல நாடுகள் ஆண்டுதோறும் புதிய விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து விண்வெளி ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில திட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் இணைந்து செயல்படுத்தி வெற்றி காண்கின்றன.
இந்நிலையில் தான் சீனா விண்வெளி ஆராய்ச்சியில் புது முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதில் எந்த நாடுகளையும் கூட்டு சேர்க்காத சீனா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இது விண்வெளி திட்டங்களில் தீவிரம் காட்டும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கவலையளிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விண்வெளியில் எதிரி நாட்டு செயற்கைகோள்களின் செயல்பாட்டை தடுப்பது, அல்லது அவற்றை அழிக்கக்கூடிய திறன் கொண்ட லேசர் ஆயுதம் தயாரிப்பில் சீனா ஈடுபட்டுள்ளது.
இதுபற்றி தைவான் நாட்டின் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு: ‛‛ரிலேடிவிஸ்டிக் கிளைஸ்டிரான் ஆம்பிள்பையர் (ஆர்கேஏ) என்ற மைக்ரோவேவ் இயந்திரம் ஒன்றை சீனா தயாரித்து உள்ளது. இது 5 மெகாவாட் திறன் கொண்ட மின்காந்த அலையை உருவாக்கும். இது ராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
இந்த இயந்திரத்துக்கு தரையில் இருந்தபடி வானில் உள்ள இலக்குகளை அழிக்கும் சக்தி கிடையாது. இருப்பினும் கூட செயற்கைக்கோள்களுடன் இணைக்க முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் விண்வெளியில் எதிரி நாடுகளின் உணர்திறன் வாய்ந்த மின்னணு பொருட்கள் உள்ளிட்டவற்றை எரித்து, அழிக்க கூடிய திறன் கிடைக்கும்.
இதற்காக டீஈவி எனும் ஒரு வகையான சாதனங்கள் பயன்படுத்தப்படும். இவை, சக்தி வாய்ந்த மின்காந்த அலை மூலம் எதிரியின் சாதனங்களை சேதப்படுத்தவோ, அழிக்கவோ செய்யும். சீனாவிடம் தற்போது உள்ள ஆர்கேஏ இயந்திரம் இந்த வகையை சேர்ந்தது இல்லை என அந்நாடு கூறுகிறது. இருப்பினும் டீஈவி அடிப்படையில் இயந்திரம் உருவாக்கப்பட்டால் அதில் இருந்து வலிமையான ஒளி கற்றைகளை அதிக வேகத்துடன் வெளியே வர வைக்கலாம். இது உலோகங்களை கூட கிழித்து செல்லும் ஆற்றலை கொண்டிருக்கும் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி பீஜிங் நகர விஞ்ஞானி ஒருவர் கூறும்போது, ‛‛சீனாவின் இந்த தொழில்நுட்பம், அதிக சக்தி வாய்ந்த ஆயுதம் ஆக செயல்படும். மனிதர்களால் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு இது ஆற்றலை கொண்டிருக்கும்” எனக்கூறி பயத்தை ஏற்படுத்தி உள்ளார். இதனால் சீனா லேசர் ஒளியை பயன்படுத்தி செயற்கைகோள்களை அழிக்கும் ஆயுதத்தை கண்டுபிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சீனாவை சமாளிக்க நவீன தொழில்நுட்பத்துடன் உணர்திறன் கொண்ட உபகரணங்களை அமெரிக்கா அதிகரிக்க வேண்டும் என வாஷிங்டன் சர்வதேச படிப்புகளுக்கான மையத்தில் பணியாற்றும் தாமஸ் கராகோ தெரிவித்து உள்ளார்.
செயற்கைகோள்களை அழிக்கும் லேசர் ஆயுதத்தை சீனா கண்டுபிடித்து பயன்படுத்தினால் அது விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பெரும் சிரமத்தை அளிக்கும். அதுமட்டுமின்றி விண்வெளியில் பல்வேறு செயல்பாடுகளுக்கு அனுப்பியுள்ள செயற்கோள்கள் பாதிக்கப்படும். இதனால் பெரும் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்யா-அமெரிக்கா இடையே மோதல் போக்கு முற்றுகிறது. விண்ணில் இயங்கும் சர்வதேச விண்வெளி மையம் வரை இந்த பிரச்சனை எதிரொலித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து சர்வதேச விண்வெளி மையம் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. போர் நடவடிக்கையால் ரஷ்யா மீது அந்நாடுகள் பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன. இதனால் 500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி மையத்தை பூமி மீது விழச் செய்வதாக ரஷ்யா சார்பில் சமீபத்தில் எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்நிலையில் தான் சீனா தந்திரமாக லேசர் ஆயுத ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகிறது.