இஸ்லாமியர்கள் கல்விக் கூடங்களுக்கு வெளியே ஹிஜாப் அணிந்துகொள்ளட்டும்- அண்ணாமலை
இஸ்லாமியர்கள் பள்ளிக்கு வெளியே ஹிஜாப் அணிந்து கொள்ளட்டும் எனவும் பள்ளிக்கு உள்ளே எந்த மதத்தை சேர்ந்தவர்களும் ஹிஜாப் அணிய கூடாது எனவும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெற்ற கட்சி விழாவில் பங்கேற்பதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகை தந்தார். முன்னதாக மேலூர் அருகே நயத்தான்பட்டியில் உள்ள வல்லடிகாரர் சுவாமி கோவிலில் வழிபாடு செய்த அவருக்கு, கிராம அம்பலகாரர்கள் வரவேற்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ’உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு மாற்று கட்சியினர் மற்றும் சுயேச்சையாக வெற்றி பெற்றவர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். உண்மையான தேசியம் கொண்டவர்கள் பாஜகவில் இணைவார்கள். சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உடன் இப்பகுதி மக்கள் இணைந்து போராடி உள்ளனர் என பேசினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘கல்விக்கூடங்களில் மாணவர்கள் எந்தவித மத அடையாளங்களை அணியக் கூடாது என ஒரு அரசும் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தில் எதற்காக அரசியல் செய்கின்றனர் என புரியவில்லை.
இஸ்லாமியர்கள் கல்விக்கூடங்களுக்கு வெளியே ஹிஜாப் அணிந்துகொள்ளட்டும். அவர்களது பாரம்பரியத்தையும், மதத்தையும் பேணிகாக்க வேண்டும். அதை விட்டுக்கொடுக்க கூடாது. அதைத்தான் நாங்களும் விரும்புகின்றோம். உண்மையான தேசியமும், தெய்வீகமும் கொண்டவர்கள் பாஜகவில் இணைவார்கள். பாஜக மட்டும் தான் மண்ணின் பாரம்பரியத்தையும் தேசியத்தையும் பாதுகாக்கின்ற கட்சி’ என்று தெரிவித்தார்.