பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்கள் மீட்கப்பட்டு நுகர்வோருக்கு பகிர்ந்தளிப்பு….
சமையல் எரிவாயுவுடன் கூடிய 369 கேஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த வியாபார நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு அவை நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்ட சம்பவம் ஒன்று எஹலியகொடை நகர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இரத்தினபுரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக் காரியாலய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து இவ்விற்பனை நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர் ஒன்றை கொள்வனவு செய்யமாறு வேடத்தில் சென்ற அதிகாரி ஒருவர் மூலம் இப்பதுக்கல் வியாபாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
இந்நிலைமையையடுத்து இவ்விடத்துக்குப் பல அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு துணிகளால் மூடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 37.5 கிலோ சிலிண்டர்கள் 40 உம், 12.5 கிலோ சிலிண்டர்கள் 272 உம், 2.5 கிலோ சிலிண்டர்கள் 32 உம், 5 கிலோ சிலிண்டர்கள் 25 உம் இங்கு காணப்பட்டுள்ளன. இவை மீட்கப்பட்டு அதே இடத்தில் நுகர்வோருக்கு விநியோகிப்பட்டுள்ளன.
நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விதிகளுக்கமைய இவ்வியாபார நிலைய உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.