புதுச்சேரி மத்திய சிறையில் விவசாய பண்ணையை பராமரிக்கும் கைதிகள்- மனம் மாறியதாக உருக்கம்
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலை 36 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் கைதிகளால் சமன்படுத்தப்பட்டு துல்லிய பண்ணை மற்றும் இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட 60 வகையான பழச் செடிகள், மூலிகைச் செடிகள் என 50,000 செடிகள் நடப்பட்டுள்ளன.
இதுமட்டுமன்றி உரம், பூச்சிக்கொல்லிகள் தயாரிக்க சிறை வளாகத்தில் மாடு, ஆடு மற்றும் முயல் வளர்க்கப்படுகின்றன. இவற்றை முறையாக கைதிகளே பராமரிக்கின்றனர்.
இந்த ஒருங்கிணைந்த பண்ணை துவக்க விழா சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது. அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், சிறைத் துறை ஐஜி ரவி தீப்சாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலாப்பட்டு சிறைச்சாலையில் 250க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களின் மறுவாழ்வுக்காக அரவிந்தர் சொசைட்டி சார்பில் பல்வேறு மனநல மற்றும் உடல்நல பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சிறைக்கைதிகள் கூறுகையில், ’எங்களைப் போன்ற குற்றவாளிகள் மனம் திருந்தி விவசாயத்திற்கு மாற நடவடிக்கை எடுத்துள்ள அதிகாரிகளுக்கு விருது வழங்க வேண்டும் என கைதிகள் கேட்டுக்கொண்டனர்.
நாங்கள் திருந்தி விட்டோம் என்று வாயால் கூறுவதை விட இந்த விவசாய நிலத்தை பார்த்தால் தெரியும் என பிரபல குற்றவாளியான மர்டர் மணிகண்டன் தெரிவித்தார்.
நாங்கள் ஆத்திரத்தில் செய்த குற்றத்திற்கு அரசு தண்டனை கொடுத்துவிட்டது. தண்டனை காலம் முடிந்து வெளிவர நேர்ந்தால் மர்டர் மணிகண்டன் என்ற பெயரை விவசாயி மணிகண்டன் மாற்றுவேன் என உறுதியாகக் கூறுகிறார்.
தண்டனை காலம் முடிந்தும் பல ஆண்டுகளாய் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
சிறையில் பல நாள் தூங்கியதில்லை. தற்போது விவசாயம் செய்வதால் நிம்மதியாக தூங்குகிறோம். ஒரு விதை செடியாக மலரும் போதும் மிக மகிழ்ச்சி அடைகிறோம். அழுகினால் இயற்கை முறையில் எப்படி பாதுகாப்பது என விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து விட்டோம். முன்பு நாள் ஒன்றிக்கு 25 ரூபாய் சம்பளம். இன்று விவசாயத்தால் நாள் ஒன்றிக்கு 200 ரூபாய் சம்பளம். தண்டனை காலம் முடிந்தும் பலரும் சிறையில் இருக்கிறோம்.
அரசு கருணையோடு விடுதலை செய்தால் இயற்கை விவசாயம் செய்ய பாடுபடுவோம் என கண்ணீருடன் கைகூப்பி கேட்டுக்கொண்டனர்.
விழாவில் பேசிய இந்த கைதியின் மகள், தனக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகை தெரியாது. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி மட்டும் தெரியும். காரணம் அன்றாவது தனது தந்தை விடுதலை ஆக மாட்டாரா…? என பேசினார்.