பேர்த்தில் பிள்ளைகளோடு எரிந்து பலியான தமிழ் தாய்!

மேற்கு ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் தனது இரண்டு குழந்தைகளுடனும் எரிந்து பலியான பெண்ணின் கணவர் நாடு திரும்பியுள்ளார். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட உறவினரைப் பார்ப்பதற்காக அமெரிக்கா சென்று கொண்டிருந்தவர், தனது குடும்பம் காரோடு எரிந்து பலியான சம்பவத்தைக் கேள்வியுற்று, டோஹாவுடன் பயணத்தை இடைநிறுத்தி, நாடு திரும்பிவந்து அதிர்ந்து போயுள்ளார் என்று குடும்பத்திற்கு நெருக்கமான மதத் தலைவர் கூறியுள்ளார்.
நாடு திரும்பிய செல்வன் கோவிந்தன் வைரவன், தனது மனைவி என்ன காரணத்துக்காக இந்தக் கொடிய முடிவை எடுத்தார் என்று எந்தப் பதிலுமின்றி அதிர்ந்துபோயுள்ளார் என்று குடும்பத்திற்கு நெருக்கமான பாஸ்டர் ஆப்ரஹாம் தவமணி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு தனது குடும்பத்துக்கு என்ன நடந்தது என்பதற்கு விடையின்றி செல்வன் கோவிந்தன் வைரவன் பேதலித்துப்போயுள்ளார் என்று கூறப்படுகிறது.
செல்வன் கோவிந்தன் வைரவன் – செல்வம்மா தம்பதிகளின் இரண்டு குழந்தைகளும் லண்டனில் பிறந்தவர்கள். அங்கிருந்து ஏழு வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து மெல்பேர்னில் வசித்தார்கள். பின்னர், பேர்த் நகருக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த அபயா மற்றும் ஏடன் ஆகியோருக்கு அவர்கள் கல்வி கற்ற பாடசாலை மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோர் பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மூன்று பலிகளுக்கும் காரணம் தற்கொலையுடன் கூடிய இரட்டைக்கொலையா அல்லது வெறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து பொலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.