ரூ. 12.5 கோடிக்கும் அதிக தங்கத்தை இந்தியாவுக்கு கடத்த முயற்சி இருவர் கைது.
இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவிற்கு தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் வைத்து கொழும்பு ஆமர் வீதி பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான சந்தேக நபர் சுமார் 6 கிலோ கிராம் தங்கத்தை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, ஆட்கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான விசாரணைப் பிரிவு மற்றும் கடல் சார் குற்றங்கள் தொடர்பான விசாரணை பிரிவு ஆகியன இணைந்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் அடிப்படையில் குறித்த தங்கத்தை சந்தேகநபர் கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச்செல்வதற்காக, அதனை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய யாழ்ப்பாணம் மாதகல் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான மற்றுமொரு சந்தேகநபர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தங்கமானது இன்றைய தினத்திற்கு ரூபா 12.5 கோடிக்கும் (ரூ. 125 மில்லியன்) அதிகமான பெறுமதியுடையது என கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த தங்கமானது சந்தேக நபருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பிலும் இக்கடத்தல் நடவடிக்கையானது எவ்வளவு காலமாக இடம்பெற்று வருகின்றது என்பது உள்ளிட்ட மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.