ஜப்பானில் கொரோனா அவசரநிலை ரத்து.

கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜப்பானும் ஒன்று. அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் வைரஸ் பாதிப்பு குறைய தொடங்கியதும் அவசர நிலை திரும்ப பெறப்பட்டது.
எனினும், கடந்த ஜனவரி மாதம் அங்கு கொரோனா வைரசின் புதிய அலை வேகமாக பரவியது. தலைநகர் டோக்கியோ உள்பட பல மாகாணங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டது. இதையடுத்து, டோக்கியோ, ஒசாகோ, சிபா, சைதாமா உள்பட 18 மாகாணங்களில் மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஜப்பானில் தற்போது கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதை தொடர்ந்து தலைநகர் டோக்கியோ உள்பட 18 மாகாணங்களிலும் அவசர நிலை திரும்பப்பெறப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.