டிஜிட்டல் தனித்துவ சட்ட ஒப்பந்தத்தால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாது.
இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசின் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்காக கையெழுத்திடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியா 300 மில்லியன் இந்திய ரூபாய்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.
குறித்த உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக இருதரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் அதில் கையொப்பமிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் நேற்று (22) செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படுவதன் மூலம் இலங்கையின் முக்கிய தரவுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமல்லவா என்று கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது என்பதற்காக இந்தியா இலங்கையிடம் தரவுகளை பெற்றுக் கொள்ளப் போவதில்லை. மாறாக அதற்கான நிதி உதவியை வழங்குவதற்கு மாத்திரமே இணக்கம் தெரிவித்துள்ளது.
எனவே இதன் ஊடாக தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய தரவு பறிமாற்றம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்புகூற வேண்டிய அனைத்து நிறுவனங்களும் இதனுடன் தொடர்புபடுகின்றன. எனவே தரவு பரிமாற்றம் தொடர்பான பிரச்சினைகள் தோற்றம் பெறாது என்று தெரிவித்தார்.
இதே வேளை இலங்கையில் சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவுவதற்காக 6 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கும் இந்தியா உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த உதவித்தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும், குறித்த நிலையத்தை நிறுவுவது தொடர்பான இலங்கைக்கும் இந்தியாவின் பாரத் இலக்ரோனிக்ஸ் கம்பனிக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் இலங்கை மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசுடன் பிரிதொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பரஸ்பர உடன்பாடுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒத்துழைப்பு வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பருத்தித்துறை, பேசாலை, குருநகர், பலப்பிட்டிய மற்றும் ஏனைய பரஸ்பர உடன்பாடுகள் எட்டப்படும் இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக இருநாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.