உலகின் அதிக மாசடைந்த தலைநகரங்களில் டெல்லிக்கு முதலிடம்..!
காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ள முதல் 100 நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
உலக அளவில் 2021ம் ஆண்டின் காற்று மாசு குறித்து சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த IQAir என்ற நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் உலகின் அதிக மாசடைந்த நகரமாக ராஜஸ்தானின் பிவாடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. நான்காவது மாசடைந்த நகரத்தின் பட்டியலில் டெல்லி இடம்பெற்றுள்ளது. அதேவேளையில் அதிக மாசடைந்த தலைநகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.
அதிகளவில் மாசடைந்த முதல் 15 நகரங்களில் இந்தியாவில் 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. வாகன மாசு, அனல் மின் நிலையங்கள், தொழில்துறை கழிவுகள் மற்றும் கட்டுமானங்கள் காரணமாக காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது.
சென்னையைத் தவிர மற்ற பெருநகரங்களில் காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளது. சீனாவில் காற்றின் தரத்தில் தொடர்ந்து முன்னேற்றம் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தூய்மையான காற்று கொண்ட நகரமாக அரியலூர் பதிவாகியுள்ளது