ரூ 1 லட்சம் கொடுத்து தமிழகம் வந்த இலங்கை தமிழ்ப்பெண்! உயிர் வாழ வழியில்லை என வேதனை
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் 10 பேர் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது.
இதனால் அங்குள்ள சாமானியர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து 2 குடும்பங்களை சேர்ந்த ஒரு ஆண், 2 பெண்கள், 3 குழந்தைகள் ஆகிய 6 பேர் நேற்று முன்தினம் இரவு தலைமன்னார் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலமாக புறப்பட்டு தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள 4-வது மணல்திட்டு பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
இவர்களை ஏற்றி வந்த படகோட்டிகள் மணல் திட்டில் இறக்கிவிட்டு மீண்டும் இலங்கைக்கு திருப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. 4-வது மணல் திட்டில் இலங்கையை சேர்ந்தவர்கள் இருப்பதாக தமிழக மீனவர்கள் மூலம் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மண்டபத்திலிருந்து இந்திய கடலோர காவல் படையினர் இந்திய கடல் எல்லை பகுதியில் உள்ள 4-வது மணல் திட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு தவித்துக் கொண்டிருந்த இலங்கை தமிழர்கள் 6 பேரையும் பாதுகாப்பாக கப்பலில் ஏற்றி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினர். இலங்கையில் இருந்து தப்பி அகதிகளாக வந்தவர்களிடம், கியூ பிரிவு பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இலங்கை மன்னார் மாவட்டம் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 2 குழந்தைகளுடன் வந்த பெண் கியூரி ரூ.1 லட்சம் கொடுத்து தனுஷ்கோடி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் மீது மண்டபம் கடலோர பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கஜேந்திரன், அவருடைய மனைவி மேரி கிளாரா மற்றும் கியூரி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மேலும் 5 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 10 பேர் மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வருகை தந்து உள்ளனர். நடுக்கடலில் படகின் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்தளித்த நிலையில் பல மணி நேர முயற்சிக்கு பின் என்ஜின் சரி செய்து செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இலங்கை பெண் கியூரி கூறுகையில், ‘இலங்கையில் நாளுக்கு நாள் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.
ஒரு கிலோ அரிசி ரூ.250 ரூபாய், பிஸ்கட் பாக்கெட் ஒன்று ரூ.230, பால், பருப்பு 300 ரூபாய் என அனைத்து பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துவிட்டது.
உயர்ந்து வரும் விலைவாசி உயர்வால் குழந்தைகளுக்கு எதுவும் வாங்கி கொடுக்க முடியாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே குழந்தைகளும், நானும் சரியாக சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டோம். அங்கு உயிர் வாழ வழியில்லை.
எனவே படகிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து தமிழகம் வந்துவிட்டேன் என்று தெரிவித்தார். இதே கருத்தையே கஜேந்திரன், கிளாரா தம்பதியும் தெரிவித்தனர்.