தேசிய தினத்தை கொண்டாடிய இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம்.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், (23) பாகிஸ்தான் தேசிய தினத்தை கொண்டாடியது
பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையை வாழ் பாகிஸ்தான் சமூகத்தினர், முற்போக்கு நோக்கம் கொண்ட , ஜனநாயக மற்றும் நலன்புரி நாடாக பாகிஸ்தானை மாற்றல் என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தான் தேசிய தினத்தை இன்று கொண்டாடியது.
பாகிஸ்தானின் நிறுவனர் குவாய்ட் இ ஆசாம் முஹம்மது அலி ஜின்னாவின் ஈடு இணையற்ற தலைமையின் கீழ் நமது தலைவர்கள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 ஆம் திகதி பாகிஸ்தானின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய தீர்மானத்தை புத்துயிர் அளித்து, தைரியத்துடனும் உறுதியுடனும் அனைத்து சவால்களுக்கும் எதிராக உறுதியாகவும், வலுவாகவும், ஒன்றுபட்டு நிற்கும் நாளாகவும் பாகிஸ்தான் இந்த நாளை கருதுகிறது.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் ஃபரூக் பர்கி எச்ஐ (எம்) இன்று காலை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற விழாவில் பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கும் தருணத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார்.
உயர் ஸ்தானிகர் கருத்துத்தெரிவிக்கையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுடன் (OIC) சேர்ந்து பாகிஸ்தானின் முயற்சிகளை சுட்டிக்காட்டியதோடு, குறிப்பாக, பாகிஸ்தானின் முயற்சியால் மார்ச் 15 ஐ “இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினம்” என்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் அறிவிக்கப்பட்டமை குறித்தும் விளக்கப்படுத்தினார்.
“ஒற்றுமை, நீதி மற்றும் வளர்ச்சிக்கான கூட்டாண்மைகளை உருவாக்குதல்” என்ற கருப்பொருளில், 2022 மார்ச் 22-23 திகதிகளில் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் 48வது வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டை பாகிஸ்தான் நடத்துவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சிறப்புச் செய்திகள் முறையே வர்த்தக மற்றும் முதலீட்டு அதிகாரி மற்றும் ஊடக இணைப்பாளரால் வாசிக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கான தனி தாயகம் கோரிக்கையானது அரசியல் ரீதியாக சரியானது என்பது காலப்போக்கில் நிரூபணமாகியுள்ளதாக ஜனாதிபதியின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் சட்டவிரோதமாக இணைப்பு, காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையை மறுப்பு, மனித உரிமை மீறல்கள், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுத்தல், சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுத்தல், தகவல் தொடர்பு முற்றுகை மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் ஆகியவை இதற்கு போதுமான காரணங்களாகும் எனவும் குறிப்பிடப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமரின் செய்தியானது பாகிஸ்தான் தேசம் எதிர்கொள்ளும் சவால்களை சுட்டிக்காட்டியது. ” பாகிஸ்தான் அரசாங்கம் வறுமையை ஒழிப்பதற்கும் நீதியை மேம்படுத்துவதற்கும் நீண்ட கால சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது.
சமூகத்தின் ஒதுக்கப்பட்ட பிரிவினர் மற்றும் அவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதில் அரசாங்கம் கூடிய கரிசனை காட்டிவருகிறது. “கம்யாப்” பாகிஸ்தான் திட்டம் இளைஞர்கள், விவசாயிகள், சிறிய அளவிலான வணிகம் ஆகிய துறைகளுக்கு பெரும் பொருளாதார நன்மைகளை வழங்கி வருகிறது.
எங்கள் முதன்மையான முயற்சியான குவாமி சேஹாட் கார்ட் , நமது நாட்டின் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் அனைத்து குடிமக்களுக்கும் உலகளாவிய சுகாதாரக் காப்பீட்டை வழங்கும்” என பிரதமரின் செய்தியில் குறிப்பிடப்பட்டது.
இறுதியாக, பாகிஸ்தானின் தேசிய தினத்தை நினைவுகூரும் வகையில், உயர் ஸ்தானிகரால் கேக் ஒன்றும் வெட்டப்பட்டது. இவ் விழாவில் இலங்கை வாழ் பாகிஸ்தான் சமூகத்தினர், பல்வேறு தரப்பினர் மற்றும் ஊடக பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.