தமிழரைக் கோட்டா கைவிடமாட்டார்! – சம்பந்தனுக்குப் பீரிஸ் பதில்.
“சிங்கள – பௌத்த மக்களின் அமோக வாக்குகளால் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் அவர் தமிழ் மக்களைக் கைவிடமாட்டார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாகவுள்ளார்.”
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
“ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திறந்த மனதுடன் பேச்சை நடத்த வேண்டும். சந்தேகப் பார்வையில் அவர்கள் செயற்படக்கூடாது” எனவும் அவர் வலியுறுத்தினார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஆக்கபூர்வமான பேச்சை நடத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி தீர்த்து வைப்பார்” எனவும் அவர் உறுதியளித்தார்.
‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் அர்த்தபுஷ்டியான பேச்சுக்கு நாம் தயார்; ஏமாறத் தயாரில்லை’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பதில் வழங்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.