முல்லைப் பெரியாறு பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் புதிய பரிந்துரை
முல்லைப் பெரியாறு அணையின் கட்டுமானப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை மேற்பார்வைக் குழு மூலம் கையாள்வதற்கு விட்டுவிடலாம் என்று தமிழக, கேரள மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை பரிந்துரைத்தது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, நீர் தேக்கிவைக்கும் அளவு ஆகியவை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், ஏ.எஸ்.ஒகா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக நடைபெற்றது.
அப்போது, கேரள அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா ஆஜராகி தனது வாதத்தைத் தொடர்ந்தார். அணையின் பாதுகாப்பு என்பது அணையில் தேக்கப்படும் நீரின் அளவைப் பொருத்து உள்ளது. பருவமழைக் காலத்தின்போது நீர்மட்டம் அதிகமாக உயர்வது, அணையின் பாதுகாப்பு பிரச்னையில் முக்கிய விவகாரமாக உள்ளது. இதனால், புதிய அணைதான் தீர்வாக இருக்கும் என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள் அமர்வு கூறியதாவது: இந்த விவகாரத்தில் ஒரு முழுமையான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். அமைப்புமுறையை வலுப்படுத்த ஒரு விரிவான நடவடிக்கை இருக்க வேண்டும். தற்போது, வழக்கின் தரப்பினர் இடையே இன்னும் கருத்து வேறுபாடுகளும், தவறான தகவல் தொடர்பும் இருப்பதையே காட்டுகிறது. அனைத்து இடங்களிலும் பாதுகாப்புப் பிரச்னை பற்றிய அச்சம் உள்ளது. ஆகவே, இரு தரப்பினரும் எதிர்பார்க்கும் பணிகளை இந்த மேற்பார்வைக் குழுவே ஏன் செய்யக் கூடாது?. இது மேற்பார்வைக் குழுவுக்கு அயல்பணி ஒப்படைப்பு செய்வது போன்றது. அப்போதுதான் இந்தக் குழு என்ன செய்ய வேண்டும் என்பது இறுதிப் பொறுப்புக்குள்ளாகும்.
இந்த விவகாரமானது இரு மாநிலங்களையும் பாதிக்கிறது. இந்தக் குழு ஒரு வழிமுறையை உருவாக்க முடியும். இதனால் இரு தரப்பின் நலனும் பாதுகாக்கப்படும். ஆகவே, இந்த விஷயங்களை எல்லாம் மேற்பார்வைக் குழுவிடம் விட்டுவிடலாம். மேற்பார்வைக் குழுவின் உத்தரவுகள் நிறைவேற்றப்படாவிட்டால், காலக்கெடு வழங்கப்படும் என நாங்கள் கூறுவோம். “இன்ஸ்ட்ருமென்டேஷன்’ செய்யப்படவில்லை என்பதுதான் குறையாக இருப்பதால், மேற்பார்வைக் குழுவே அந்தப் பணியைச் செய்யலாம். கட்டமைப்பு பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் மேற்பார்வைக் குழுவின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான உத்தரவுகளை இரு மாநிலங்களுக்கும் இந்தக் குழு வழங்க முடியும். பொறுப்புடைமை உருவாக்கப்பட வேண்டும். இல்லையெனில், விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும். புதிய அணை விவாதத்தைப் பொருத்தவரை, பேபி அணையை உருவாக்கியதுபோல, மேலும் ஓர் அணையை அமைப்பதன் மூலம் ஸ்திரத்தன்மை பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என மேற்பார்வைக் குழு கருதினால், அந்தப் பரிந்துரையை அது செய்யலாம். அதற்கு இரு மாநிலங்களும் கட்டுப்படும் என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.
தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே ஆஜராகி, “மேற்பார்வைக் குழுவின் நோக்கம், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்வதாகும். இவை முக்கியமான விஷயங்கள் என்பதால், இந்த விவகாரத்தில் மாநில அரசிடமிருந்து அறிவுறுத்தல் பெற வேண்டியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையைத் தக்கவைப்பதில் தமிழகம் ஆர்வம்காட்டி வருகிறது’ என்றார்.
மேற்பார்வைக் குழுவின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “இரு மாநிலங்களுடனும் கலந்தாலோசித்து மேற்பார்வைக் குழு அளித்த பரிந்துரைகள் பின்பற்றப்படுவதில்லை. மேலும், குழு பிறப்பிக்கும் உத்தரவுகளும் அமல்படுத்தப்படுவதில்லை’ என்றார். அதற்கு நீதிபதிகள் அமர்வு, “மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மீது சில பொறுப்புடைமை வைத்திருக்க முடியும். கண்காணிப்புக் குழுவால் சம்பந்தப்பட்ட துறைக்கும், மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கும் தகவல் அனுப்பப்படலாம். அப்போதுதான், உத்தரவைப் பின்பற்றாததற்காக தலைமைச் செயலர் பொறுப்புக்குள்ளாக்கப்படுவார். அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும்’ என்று தெரிவித்தது.
மனுதாரர்களில் ஒருவரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், மேற்பார்வைக் குழுவின் செயல்பாடு குறித்து வாதங்களை முன்வைத்தார். அதற்கு நீதிமன்றம், “இந்த நீதிமன்றம் அமைத்த மேற்பார்வைக் குழுவைக் கேள்வி கேட்க உங்களை அனுமதிக்க முடியாது. மேலும், இது பாதுகாப்பானதா அல்லது பாதுகாப்பற்றதா என்பதை நிபுணர்கள் வரையறுக்க வேண்டும். இது ஒரு தீர்க்க முடியாத பிரச்னை போன்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டாம்’ என்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் வாதங்களை தொடர்ந்து முன்வைக்கும் வகையில் விசாரணையை மார்ச் 29-க்கு நீதிபதிகள் அமர்வு பட்டியலிட்டது.