‘நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை’ – ஆத்திரத்தில் கூட்டுறவு சங்கத்திற்கு பூட்டு போட்ட பொதுமக்கள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி கிராமத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 5 பவுன் தங்க நகை அடகு வைத்தவர்களில் பலருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினை பூட்டியதால் பரபரப்பு எற்பட்டது. 900க்கும் மேற்பட்டார் நகை அடகு வைத்து கடன் பெற்ற நிலையில் 343 பேருக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 1300க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினரர்களாக இருப்பதாக தெரிகிறது. 5பவுன் தங்க நகை அடகு வைத்தால் கடன் தள்ளபடி செய்யப்படும் என்று கூறப்பட்டதை தொடர்ந்து பலரும் இந்த கூட்டுறவு சங்கத்தின் நகைகளை அடகு வைத்தாக கூறப்படுகிறது.
தற்பொழுது சில வரன்முறைகளை அரசு அறிவித்து 5 பவுன் தங்க நகை கடன் பெற்றவர்கள் கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 900க்கும் மேற்பட்டவர்கள் நகைகளை அடகு வைத்ததில் 343 பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு சங்கத்தின் விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை அறிந்து அங்கு வந்த அப்பகுதி மக்கள் தாங்கள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளனவா என்று பார்த்தபோது பல பேரது நகை கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கூட்டுறவு தொடக்க வேளாண்மை அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய விளக்கம் அளிக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தும் கயத்தார் போலீசார் விரைந்து வந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினை திறந்து வைத்தது மட்டுமின்றி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் பொது மக்கள் காவல்துறையினருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நகை அடகு வைத்தவர்களில் பலருக்கு தற்பொழுது வரை பணம் கிடைக்கவில்லை என்றும், ஆனால் வட்டி கட்டி நகையை திருப்ப செல்வதாகவும், பாகுபாடு இல்லமால் அனைவருக்கும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.