பெண் செய்தியாளர் எழுதிய 3 உருக்கமான தற்கொலை கடிதங்கள்
கேரளத்தைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர், கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய மூன்று தற்கொலை கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நான் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போகிறேன். இதனால் இரண்டு பேருக்கு மகிழ்ச்சி. ஒன்று நீ, மற்றொன்று நான் என்று ஆங்கில ஊடகத்தில் பணியாற்றி வந்த சுருதி நாராயணன் (37) தனது கணவருக்கு எழுதிய தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு மகிழ்ச்சிதான், ஏனென்றால் உன் கொடுமையிலிருந்து நான் தப்பிவிடுவேன், உனக்கும் மகிழ்ச்சிதான், ஏனென்றால் உன் வாழ்க்கையில் இனி நான் இருக்க மாட்டேன் என்று மார்ச் 20ஆம் தேதி ஞாயிறன்று எழுதிய தற்கொலைக் கடிதம் விவரிக்கிறது.
பெங்களூருவில், சுருதி தனது கணவர் அனீஷுடன் வாழ்ந்து வந்த குடியிருப்பில், மார்ச் 22ஆம் தேதி அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வேலைக்கும் செல்லாமல், செல்லிடப்பேசியையும் எடுக்காததால் சந்தேகம் அடைந்து வீட்டுக்கு வந்த சகோதரர் நிஷாந்த், சகோதரியை சடலமாகக் கண்டெடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அவர்களது வீட்டிலிருந்து மூன்று தற்கொலை கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒன்று, காவல்துறைக்கு, மற்றொன்று கணவருக்கும், மூன்றாவது, வயதான தனது பெற்றோருக்கும் சுருதி எழுதியவை.
கணவருக்கு எழுதிய தற்கொலைக் கடிதத்தில், 20 நிமிடத்துக்கு மேல் யார் ஒருவராலும் உன்னுடைய கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாது. ஒரு வேளை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், காது கேட்காத, கண் தெரியாத பெண்ணை திருமணம் செய்து கொள். அப்போதுதான் நீ என்ன பேசுகிறாய், செய்கிறாய் என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார் என்று குறிப்பிட்டிருப்பதாக சகோதரர் நிஷாந்த் கூறினார்.
பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், நான் வாழ்ந்து கொண்டிருந்தால், அது உங்களுக்கு ஒவ்வொரு நாளையும் துக்கமாக மாற்றிவிடும். அதுவே நான் இறந்துவிட்டால் ஒரு சில நாள்களில் துக்கம் போய்விடும் என்று சுருதி கூறியுள்ளார்.
இந்த தற்கொலை சம்பவத்தில், நிஷாந்த் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவருடன் பணியாற்றிய நண்பர்கள், திருமணத்துக்கு முன் அவர் எப்போதும் மகிழ்ச்சியாகக் காணப்படுவார். சவாலை திறமையாகக் கையாள்பவர். ஆனால் ஒரு திருமணம் அவரை எப்படி மாற்றிவிட்டது என்று தெரியவில்லை. துணிச்சலானவர் என்பதால்தான் அவர் யாருடைய உதவியையும் நாடவில்லை என்று கூறி கண் கலங்குகிறார்கள்.