எதற்கும் துணிந்தவன்- திரை விமர்சனம்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, வினய், பிரியங்கா மோகனன், சத்யராஜ், சரண்யா, சூரி, புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’.
தெரிந்தோ தெரியாமலோ இந்தப் படம் முத்தாய்ப்பாக மகளிர் தினம் முடிந்து இரண்டு நாட்களில் வெளியாகியிருக்கிறது. படம் முழுக்க பெண்களின் பாதுகாப்பு குறித்து வகுப்புகள் எடுக்கப்பட்டிருப்பதற்கே முதலில் இயக்குநர் பாண்டிராஜுக்கு பாராட்டுகள்.
வடநாடு, தென்னாடு என இரண்டு ஊர். ஏதோ ஒரு அசம்பாவிதம் காரணமாக இரண்டு ஊர்களும் ஒருவருக்குள் ஒருவர் பெண் கொடுத்து பெண் எடுக்க மாட்டோம் என்கிற ரீதியில் பிரச்னை ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. எப்படியேனும் இந்தப் பிரச்னையை சரி செய்து திருவிழாவை நடத்த வேண்டும் என யோசித்து அதற்கான ஆயத்த வேலைகள் செய்யும் ஆதி ராயர் (சத்யராஜ்). அவரின் ஒரே மகனாக ஊரில் எந்தப் பிரச்னை என்றாலும் முதல் ஆளாக நிற்கும் இளம் வக்கீல் கண்ணபிரான் (சூர்யா). இதற்கிடையில் திடீரென காணாமல் போகும் பெண்கள், மர்மமாக விபத்தில் இறக்கும் பெண்கள், குடும்பமாக பெண்பிள்ளைகளின் வீட்டார் தற்கொலை , மிரட்டல் என காட்சிகள் நகர அதில் ஒன்றிரண்டு வழக்குகள், பிரச்னைகள் என கண்ணபிரானிடம் வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக ஆராய்ந்தால் திடுக்கிடும் தகவல்கள் உட்பட இதில் கைகொடுக்க வந்த கண்ணபிரானின் குடும்பத்தாரும் கூட சிக்கிக் கொள்ள முடிவு என்ன என்பது பாண்டிராஜ் ஸ்பெஷல் சென்டிமென்ட் கிளைமாக்ஸ்.
சூர்யா… கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து சூர்யாவை திரையில் பார்க்க ஏதுவாக படம் முழுக்க மாஸ், கிளாஸ் ஆக்ஷன் என பந்தாடுகிறார். உடன் ‘ஜெய்பீம்’ சந்த்ரு கேரக்டரின் நீட்சியாகவும் பெண்ணியம் பேசி கைதட்டல் வாங்குகிறார். கூடவே காதல், ரொமான்ஸ், அம்மா பாசம், அப்பா செல்லம், நல்ல அண்ணன் என படம் முழுக்க சூர்யாவும் சூர்யா நிமித்தமுமாக மிரட்டுகிறார்.
பிரியங்கா மோகன் முதல் பாதி முழுக்க சுட்டி, குட்டியாக காதலிப்பது, டான்ஸ் ஆடுவது என இத்தோடு அவர் பங்கு முடிந்தது போல என நினைத்தால் அதுதான் இல்லை என அதிர்ச்சியாக பின் பாதியில் அவர் நடிப்பு மற்றுமொரு பலமாக படத்தைத் தாங்கி நிற்கிறது. சென்சிடிவ் காட்சிகள், வசனங்கள், தவிப்பு என பிரியங்காவுக்கு மேலும் ரசிகர் வட்டம் இந்தப் படத்தால் கூடலாம். தவிர பாண்டிராஜ் ஸ்பெஷல் சத்யராஜ், சரண்யா, சூரி, புகழ், இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி காம்போவில் காதல், குடும்பக் காமெடிகள்.
உண்மைச் சம்பவத்தை தைரியமாக கையில் எடுத்துக்கொண்டு அதில் கமர்சியல் கலர்ஃபுல் காட்சிகளையும் புகுத்தி எளிமையாக பெண்ணியம் பேசிய பாண்டிராஜ் மீண்டும் ஒருமுறை சபாஷ் பெறுகிறார்.
படம் முழுக்க பெண்களையும் தாய்மார்களையும் ஈர்க்கவும் சாட்டையடி பதிவுகள் போடவும் ஏராளமாக காட்சிகள் கடக்கின்றன. சில வசனங்கள் நம்மையே அறியாமல் சிலிர்க்க வைக்கும் போது ‘ஜெய்பீம்’ சூர்யா சட்டென நினைவுக்கு வந்து செல்கிறார். ’இன்னமும் பொண்ணுங்க பாலுறுப்புல கௌரவத்தை பார்க்கறதெல்லாம் மடத்தனம்’ ’ஆண் பிள்ளைகள அழக்கூடாதுன்னு சொல்லி வளர்க்கறதைவிட , பெண்களை அழவைக்கக் கூடாதுன்னு சொல்லி வளங்க’, ‘பெத்துப் போடுறவன் எல்லாம் அப்பன் இல்ல, வளர்க்கத் தெரிஞ்சவன்தான் அப்பன்’.
“ஒரு வீடியோ வெளியானா அதுக்கு வெட்கப்படவேண்டியது அந்த வீடியோவுல இருக்கறவங்க இல்ல, அதை எடுத்தவங்க’. போன்ற வசனங்கள் நிச்சயம் பெண்களை விசிலடிக்கத் தூண்டும். படத்துக்கு மற்றுமொரு மாஸ் டி.இமானின் இசைதான். ‘வாடா தம்பி’, ‘உள்ளம் உருகுதய்யா’, மற்றும் ‘சும்மா சுர்ருன்னு’ பாடல்கள் ஃபேவரைட் சார்ட் லிஸ்ட்டில் எப்போதோ சேர்ந்துவிட்டன. எனினும் விறுவிறு கதைக்கு ஆங்காங்கே தடைக்கல்லாகவும் தென்படுகிறது. ஆனால் இமானின் பின்னணி இசை மாஸ் காட்சிகளில் கதகளி ஆடியிருக்கிறது. ரத்னவேலுவின் ஒளிப்பதிவு பாடல்களில் கலர்ஃபுல் எனில் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி. ராம்-லக்ஷ்மன், அன்பறிவு ஸ்டன்ட் படத்தை பரபரவென நகர்த்துகிறது.
’கோட்டை மாட்டினா ஜட்ஜ், வேட்டி கட்டினா நானே ஜட்ஜ்’ வசனம் ‘ஜெய்பீம்’ சந்த்ரூ கேரக்டருக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க சூர்யா எனக் கேட்க தோன்றுகிறது. ஆனால் சில பிரச்னைகளுக்கு வாய்ப்பேச்சு தீர்வாகாது, எடுத்துகிட்டு நாலு சாத்து சாத்தியிருந்தா என்றைக்கோ தீர்வு கிடைத்திருக்கும் என்னும் உண்மை நிலை நம்மை மௌனமாக்கத்தான் செய்கின்றது. மொத்தத்தில் சினிமாட்டிக் கிளைமாக்ஸாக இருப்பினும், அந்த கிளைமாக்ஸ் உண்மைச் சம்பவத்தில் நிகழ்ந்திருக்கலாமே என்னும் அளவுக்கு பார்வையாளர்களை மனதுக்குள் குமுற வைத்து பாமர மனிதனுக்கும் புரியும்படி பெண்ணிய வகுப்பெடுத்திருக்கிறான் ‘எதற்கும் துணிந்தவன்’.