”இந்தியா – சீனா இடையிலான உறவு சுமுகமாக இல்லை” : வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர்
இந்தியா – சீனா இடையிலான உறவு சுமுகமாக இல்லை என்றும், ஒப்பந்தத்தை மீறி, அதிக அளவிலான படைகளை லடாக் எல்லையில் சீனா குவித்துள்ளதாகவும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கில் பேங்காங் சோ ஏரிப் பகுதியில், கடந்த 2020 மே மாதம் எல்லைப் பிரச்சனையால் இந்திய – சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டனர். அதன் பிறகு இருநாடுகளுக்கு இடையே நேரடி பேச்சுவார்த்தைகள் எதுவும் இந்தியாவில் நடைபெறவில்லை.
இந்நிலையில், டெல்லி வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, சவுத் பிளாக் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசினார்.
அப்போது, இந்தியா – சீனா இடையே நடைபெற்று வரும் ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, எல்லைப் பிரச்னை மற்றும் உக்ரைன் – ரஷ்யா போர் ஆகியவை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து சீனப் படைகளை முழுமையாக வாபஸ் பெறுமாறு, வாங் யி இடம், அஜித் தோவல் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து, ஐதராபாத் இல்லம் சென்ற வாங் யி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பல முக்கிய அதிகாரிகளும் பங்கேற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது, எல்லைப் பிரச்னைகளை சுமூகமாக பேசி தீர்ப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்சங்கர், இருநாட்டு நல்லுறவைப் பேண, படைகளை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
1993-96 ஒப்பந்தத்தை மீறி, எல்லைப்பகுதியில் அதிக அளவிலான படைகளை சீனா குவித்துள்ளது. இதுவே எல்லைப் பகுதி நிலை சுமுகமாக இல்லை என்பதை காட்டுகிறது.
மேலும், எல்லையில் பதற்றத்தை முழுமையாக முடிவுக்கு கொண்டுவர, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.