நாளை அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்.. வங்கி, போக்குவரத்து சேவைகள் பாதிப்பு?
நாளை அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கவுள்ள நிலையில் வங்கி மற்றும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள், விரோத மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடைபெறவுள்ளதாக தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.
மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறுதல், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை கைவிடுமாறு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தை பொருத்தளவில் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தினங்களில் போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோன்று பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடத்த ஆர்வம் காட்டும் ஊழியர்கள் மாநில அரசுகளால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில், அனைத்து அரசு அதிகாரிகளும் போராட்டம் அறிவித்துள்ள இரு தினங்களிலும், காலை முன் கூட்டியே அலுவலகங்களுக்கு வந்து, தங்களுக்கு கீழ் பணியாற்றுவோர் வேலைக்கு வருவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒருசிலர் போராட்டங்களில் ஈடுபடலாம் என்பதால், அரசு அலுவலகங்கள், பஸ் பணிமனைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம், பஸ்களை வழக்கம்போல் இயக்குவோம்’ என அறிவித்துள்ளன.
இதேபோன்று வங்கி ஊழியர்கள் தரப்பிலும் அதிக எண்ணிக்கையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் அடிப்படையில் நாளை நடைபெறவுள்ள போராட்டம் தமிழகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.