கூட்டமைப்பினருடனான பேச்சு தொடரும் தமிழரின் மனதை வெல்வார் கோட்டா.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சமரசப் பேச்சை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து முன்னெடுப்பார். இந்தப் பேச்சுகள் மூலம் தமிழ் மக்களின் மனதை ஜனாதிபதி வெல்வார்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சம்பந்தன் சிறந்த மூத்த அரசியல்வாதி. அவர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு ஆரம்பித்துள்ள பேச்சை உள்நாட்டில் உள்ளவர்களும், வெளிநாட்டுத் தூதுவர்களும் வரவேற்றுள்ளனர்.
அரசியல் தீர்வு உள்ளிட்ட 5 விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியும் கூட்டமைப்பினரும் திறந்த மனதுடன் பேச்சை ஆரம்பித்துள்ளனர். இது ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் எதிரணியினருக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
கூட்டமைப்பினருடனான சமரசப் பேச்சை ஜனாதிபதி தொடர்ந்து முன்னெடுப்பார். இந்தப் பேச்சுகள் மூலம் தமிழ் மக்களின் மனதை ஜனாதிபதி வெல்வார்.
சஜித் அணியினர் என்னதான் திட்டங்கள் வகுத்தாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. அடுத்த தடவையும் கோட்டாபய ராஜபக்சவே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார்” – என்றார்.