விரைவில் தனியார் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் முதல்வர் உறுதி: தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
கேரள அரசு விரைவில் குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை உயர்த்தும் என்று முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்ததை அடுத்து, தனியார் பேருந்து உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெறப்பட்டது என்று பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கேரளம் மாநில தனியார் பேருந்து நடத்துநர்கள் கூட்டமைப்பின் தலைவர் சத்யன் கூறியதாவது:
ஞாயிற்றுக்கிழமை காலை தலைமைச் செயலகத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று முதல்வர் உறுதியளித்ததாகவும், தனியார் பேருந்து உரிமையாளர்களின் சேவைகளை தொடருவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என முதல்வர் உறுதியளித்ததுடன் மார்ச் 24 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். இந்த பேச்சுவார்த்தையில் மாநில சாலை போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜூவும் கலந்து கொண்டார்.
முதல்வர் அளித்த உறுதிமொழியை அடுத்து தற்போது வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது என்று கூறினார்.
தொடர்ந்து டீசல் விலை உயர்ந்து வருவதை அடுத்து குறைந்தபட்ச பயணச்சீட்டு கட்டணத்தை அதிகரிக்கக் கோரி தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பயணச்சீட்டு கட்டணம் உயர்த்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் உறுதி அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதனால் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை ரூ.12 ஆகவும், மாணவர்களுக்கான குறைந்தபட்ச சலுகைக் கட்டணத்தை ரூ. 6 ஆகவும் உயர்த்துமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கிலோமீட்டர் கட்டணத்தை தற்போதுள்ள 90 பைசாவில் இருந்து ரூ.1.10 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.