ஆர்சிபி மீது ஆதங்கத்தை வெளிப்படுத்திய சஹால்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 8 ஆண்டுகள் விளையாடியிருக்கிறேன் என்னை அணியிலிருந்து அனுப்பும்போது ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை என்று சுழற்பந்துவீச்சாளர் யஜுவேந்திர சஹல் ஆதங்கப்பட்டுள்ளார்.
ஆர்சிபி அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட சஹலை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இந்த சீசனில் ராஜஸ்தான் அணியிலிருந்து சஹல் விளையாட உள்ளார். ஏலத்தில் ரூ.6.50 கோடிக்கு சஹலை ராஜஸ்தான் அணி விலைக்கு வாங்கியது.
நடப்பு சீசனில் 4 வீரர்களை மட்டுமே ஓர் அணி தக்கவைக்க முடியும் என்ற விதி இருந்தது. இதனால், ஆர்சிபி அணி விராட்கோலி, மேக்ஸ்வெல், சிராஜ் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்தது
. ஆர்சிபி அணிக்காக 8 சீசன்களாக ஆடிய சஹலை கழற்றிவிட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் யஜூவேந்திர சஹல் தனது ஆதங்கத்தைத் தெரிவித்து ஆர்சிபி மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் ஆர்சிபி அணியுடன் உணர்வுரீதியாக நெருக்கமாகஇருந்தேன். ஓர் ஆண்டு இருஆண்டுஅல்ல, 8 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடியிருக்கிறேன். ஆனால், வேறு ஒரு அணிக்காக திடீரென விளையாடுவேன் என நான் ஒருபோதுமே நினைக்கவே இல்லை.
நான் ஆர்சிபி அணியிலிருந்து விலகி, ராஜஸ்தான் அணிக்கு சென்றபின் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் ஏராளமான கேள்விகள் கேட்கிறார்கள். எதற்காக அதிகமான பணம் கேட்டு ராஜஸ்தான் அணிக்கு சென்றீர்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள்.
ஆனால், உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஆர்சிபிஇயக்குநர் மைக் ஹெசன் திடீரென்று என்னை அழைத்து, 3 வீரர்களை தக்கவைக்கப் போகிறோம். விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகியோர் மட்டும்தான்.
நான் அணியில் நீடிக்க விரும்புகிறேனா அல்லது உங்களை நாங்கள் தக்கவைத்துகொள்ள விரும்புகிறீர்களா என என்னிடம் ஆர்சிபி நிர்வாகம் கேட்கவே இல்லை. 3 வீரர்களை தக்கவைக்க விரும்புகிறோம் என்று மட்டும் என்னிடம் தெரிவித்தனர். நான்அவர்களிடம் பணமும் கேட்கவில்லை, அவர்கள் என்னை தக்கவைக்க வேண்டும்என்று நான் கேட்கவும் இல்லை. ஆனால், நான் பெங்களூரு ரசிகர்களுக்கு உண்மையாக இருப்பேன். நான் அவர்களை மிகவும் விரும்புகிறேன்.நான் எந்தஅணியிலிருந்தாலும் அவர்களை விரும்புகிறேன்
நான் அணியும் ஜெர்ஸி வித்தியாசமாக இருக்கலாம், ஆனால்,நான் நானாகவே இருப்பேன். என்னுடைய விக்கெட் எடுக்கும் திறமை எந்த அணிக்கு சென்றாலும் மாறாது. நான் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன். ஜெர்ஸி மட்டும்தான் மாறியுள்ளது, என் விளையாட்டு மாறவில்லை. ஆர்சிபிக்கு விளையாடியதைப் போலவே நான் ராஜஸ்தான் அணிக்கும் விளையாடுவேன். எதுவும் மாறப்போவதில்லை. ராஜஸ்தான் அணி என் மீது நம்பிக்கை வைத்து ஏலத்தில் எடுத்துள்ளார்கள்” என்று தெரிவித்தார்.