சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. 6,100 கோடியில் புதிய ஒப்பந்தங்கள்!
அபுதாபியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து, துபாய் மற்றும் அபுதாபியில் நான்கு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, தாயகம் திரும்பிய முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், 4 நாட்கள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றார். அங்கு தொழிற்துறையினர், முதலீட்டாளர்கள் என பல தரப்பினரை சந்தித்த அவர், தமிழகத்தில் தொழில் தொடங்க உகந்த சூழலை எடுத்துக்கூறி, தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்தார்.
கடைசி நாளான நேற்று, அபுதாபி சென்ற முதலமைச்சர், லுலு நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதலீடு செய்ய கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று, 3 ,500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் வகையில், 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.
அதன்படி, 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் 2 வணிக வளாகங்கள் மற்றும் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் நிறுவனம் தமிழகத்தில் நிறுவப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள், முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகின.
இதையடுத்து, அபுதாபி வாழ் தமிழர்கள் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புலம்பெயர் தமிழர் வாரியம் அமைத்ததற்காக பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் பேசிய அவர், துபாய் வாழ் தமிழர்களின் இன்முகத்தைப் பார்க்கும் போது, அவர்களின் மகிழ்ச்சியை உணர முடிவதாக குறிப்பிட்டார். மேலும், முதலீடுகளை ஈர்க்க மேற்கொண்ட இந்தப் பயணத்தின் வெற்றியை பொறுக்க முடியாத சிலர், கோடிக்கணக்கில் பணம் எடுத்து வந்துள்ளதாக அவதூறு பரப்புகின்றனர் என்றும் முதலமைச்சர் சாடினார்.
தொடர்ந்து, உங்களில் ஒருவனாக தன்னை ஏற்றுக் கொண்ட துபாய் தமிழர்களை காண அடிக்கடி வருவேன் என்றும் முதலமைச்சர் தனது உரையில் தெரிவித்தார். அந்நிகழ்ச்சியுடன் தனது நான்கு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் வந்தார்.
சென்னை விமானநிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக வெளிநாட்டினர் பாராட்டு தெரிவித்தனர் என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்றும், 6 முக்கிய நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
மேலும், அதிமுக ஆட்சியில் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தக்களும் வெறும் காகித பூக்களாகவே இருந்தன எனவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரித்தார்.