கொரோனா காலர் ட்யூன்னுக்கு ’குட் பை’ சொல்லும் மத்திய சுகாதாரத் துறை
அலைபேசியில் ஒருவரை தொடர்புகொள்ளும்போது எதிர்முனையில் ஒலிக்கும் கொரோனா எச்சரிக்கை காலர் ட்யூன் விரைவில் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதையடுத்து 2020 மார்ச் 23ம் தேதி நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து பல்வேறு வழிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன் ஒருபகுதியாக தொலைபேசியில் ஒருவரை தொடர்புகொள்ளும்போது, கொரோனா வைரல் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்வது என்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருமல் ஓசையுடன் தொடங்கும் இந்த விழிப்புணர்வு விளம்பரம், பின்னர் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள செய்ய வேண்டியது என்னென்ன என்பதையும் விளக்கும். இதன் பின்னர், நாம் தொடர்புகொண்ட நபருடன் பேச முடியும்.
முதலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சான் குரலில் இந்த விழிப்புணர்வு காலர் ட்யூன் வெளிவந்தது. பின்னர், அமிதாப் பச்சானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது, அமிதாப் பச்சானே எச்சரிக்கையுடன் இல்லை, எனவே அவரது குரலில் கொரோனா எச்சரிக்கை காலர் ட்யூன் தேவையில்லை என பலரும் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே, அமிதாப் குரலுக்கு பதிலாக பெண் ஒருவரின் குரலில் தற்போது இந்த காலர் ட்யூன் ஒலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்துவிட்ட நிலையில், இந்த காலர் ட்யூனை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் இந்த காலர் ட்யூன் நிறுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.