ஆணாக இருந்து பெண்ணாக மாறியவருக்கு மீண்டும் அரசு வேலை – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டு
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கடந்த 25ஆம் தேதி தாட்சாயிணி என்ற பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்கி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் . இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அத்துடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சந்தானராஜ் என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு பஞ்சாயத்து ஒன்றில் பணிபுரிந்தார். அவர் திடீரென ஒரு நாள் வேலைக்கு வரவில்லை. அவர் எங்கே போனார் என்பது தெரியவில்லை. இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பணியை தனக்கு வழங்கும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றதா என்ற ஒரு விண்ணப்ப கடிதத்தை சந்தானராஜ் எழுதினார். அதில், தான் ஏன் வேலையை தொடர முடியாமல் போனது என்ற விவரத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
அதில், 2106ம் ஆண்டு, தான் மாற்று பாலின சிகிச்சை செய்து கொள்வதற்காக பணியில் இருந்து வெளியேறியதாகவும். அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் அளவிலும் மன அளவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தன்னால் பணியைத் தொடர இயலவில்லை எனவும், தற்போது மீண்டும் அந்தப் பணி கிடைக்குமா எனவும் கோரிக்கை விடுத்து தாட்சாயிணியாக கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கிடையில், 5 ஆண்டுகள் தன்னுடைய மகனை இழந்து தவித்த அவரின் அம்மா குப்பு 2020ஆம் ஆண்டு தாட்சாயிணியை தேடி கண்டுபிடித்துள்ளார். அவர், எதுவானாலும் சரி வீட்டுக்கு வா என்று கூறி ஆதரவு கொடுத்துள்ளார். இதன் பிறகு முதலமைச்சரின் சிறப்பு பிரிவுக்கு தன்னுடைய நிலைமையை விளக்கிக் கூறி கடிதம் ஒன்றை எழுதி தன்னுடைய பழைய பணியை மறுபடியும் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சந்தானகுமாராக சென்று தற்போது தாட்சாயிணியாக வந்த அவருக்கு கொடுவேலி பஞ்சாயத்தில் மாவட்ட ஆட்சியர் முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார். இதனால், மீண்டும் தன்னுடைய பணியைத் தொடங்கியுள்ளார் தாட்சாயிணி.
இந்நிலையில், “சின்னச் சின்ன விஷயங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டு, கருணை மற்றும் இந்த விவகாரத்தின் பாலினம் சார் நுணுக்கமான உணர்வுகளை கருத்தில் கொண்டு அவருக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது” என்று டிவீட் செய்துள்ளார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்.
இந்நிலையில், மனதால், உணர்வுகளால் தான் ஓர் ஆண் அல்ல என்று தனக்கு 15-16 வயதிலேயே தெரிந்துவிட்டது என்றும், 12ஆம் வகுப்பு முடித்தவுடன் இங்கே பணிக்கு சேர்ந்ததாகவும், ஆனால் உடல் மற்றும் மனரீதியாக ஏற்ற மாற்றங்களை தாங்கிக் கொள்ள இயலாமல் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது என்று தாட்சாயிணி தெரிவித்துள்ளார்.
தாட்சாயிணியின் நிலையை கருத்தில் கொண்டு தக்க சமயத்தில் முடிவெடுத்த ஆட்சியருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.