இரண்டாவது நாளாக தொடரும் ஸ்டிரைக் – தமிழகத்தில் இன்று எவ்வளவு பேருந்துகள் இயங்கும்?
மத்திய அரசைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் நடத்திய முதல் நாள் வேலை நிறுத்தத்தால் வங்கிகள், காப்பீட்டு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கேரளா, மேற்குவங்க மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்நிலையில், இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தலைநகர் டெல்லியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் உட்பட அனைத்து வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல் மற்றும் காசோலை பரிவர்த்தனை பணிகள் முழுமையாக முடங்கின. மேற்குவங்க மாநிலம் ஜாதவ்பூர் ரயில் நிலையத்தில் இடதுசாரி தொழிற்சங்க உறுப்பினர்கள் தண்டவாளங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று மேற்குவங்கத்தில் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தால் ரயில் சேவை முடங்கியது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அன்றாட பணிக்கு செல்வோர் அவதிக்கு ஆளாகினர். ஆந்திர மாநிலம் விஜயவாடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொழிற்சங்கத்தினர் பேரணி நடத்தினர்.
இடதுசாரிக் கூட்டணி ஆளும் கேரளாவிலும் வேலை நிறுத்த போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அன்றாட பணிக்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்ததால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பஞ்சாப்பில் தொழிற் சங்கத்தினருக்கு ஆதரவாக விவசாய சங்கங்களும் போராட்டத்தில் குதித்தன. பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தால் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது.
இதனிடையே, அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, இன்றும் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தொழிற்சங்கத்தினரின் இரண்டு நாள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக மற்றும் இடதுசாரி கட்சிகளின் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடு தழுவிய அளவிலான முதல் நாள் வேலை நிறுத்தத்தால் வங்கிகள், காப்பீட்டு நிறுவன சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். இதேபோன்று நிலக்கரி, ஸ்டீல், எண்ணெய், தொலைதொடர்பு, மின்சாரம் உள்ளிட்ட சேவைகள் பகுதியளவு பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நடத்திய வேலைநிறுத்தம் காரணமாக, பேருந்து சேவை முடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 15,335 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், நேற்று 5023 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 10 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால், சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 61,861 பேர் பயணம் மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொருளாளர் நடராசன், முன்னணி நிர்வாகிகள் மட்டுமே இன்றைய வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார். மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்குவார்கள் என்றும், 60 சதவீத பேருந்துகள் இயங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் நடராசன் கூறினார்.
10 தொழிற்சங்கங்களை சேர்ந்த 20 கோடி பேர் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்கள் முன் வைக்கும் 12 கோரிக்கைகைள்:
1. தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்பாக மாற்றியதை கைவிட வேண்டும்
2 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது
3 அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
4 மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்
5. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
6. அங்கன்வாடி,மதிய உணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
7. முறைசாராத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும்
8. வருமானவரி செலுத்தாத குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ரூ. 7,500 அளிக்க வேண்டும்
9. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்
10. கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு பாதுகாப்பு & இன்சூரன்ஸ் வசதிகளை அளிக்க வேண்டும்
11. வேளாண்மை, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும் .
12. பணக்காரர்கள் மீது செல்வ வரி விதிக்க வேண்டும்.