இந்த அரசை வீட்டுக்கு விரட்டியடுத்துவிட்டு புதிய ஆட்சியை நிறுவுவோம்! – கம்மன்பில சூளுரை.
“வேலை செய்ய முடியாத இந்த அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மக்களுக்காகப் பணியாற்றக்கூடிய அரசொன்றை மக்களே உருவாக்கிக்கொள்ள சந்தர்ப்பத்தை மீண்டும் ஏற்படுத்திக்கொடுப்போம்.”
இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“அத்தியாவசியப் பொருட்களான எரிபொருள், மருந்துப்பொருட்கள், உணவுப் பொருட்களுக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உண்மையில் இந்த தட்டுப்பாடு உருவாக்கப்பட்டதொன்று.
கடந்த காலங்களில் நாட்டுக்கு எதிரான பல காட்டிக்கொடுப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கு நாட்டு மக்களுக்கு நேரமில்லை.
பால்மாவுக்காகவும், சமையல் எரிவாயுவுக்காகவும், எரிபொருட்களுக்காகவும் வரிசையில் நின்றுவிட்டு, வீட்டுக்குச் செல்லும்போது வீட்டில் மின்சாரம் இருக்காது. இதனால், அரசின் சரி, தவறுகளைக் கண்டறிய மக்களால் முடியவில்லை.
தற்போதைய அரசு பொறுப்பேற்கும்போது டொலரின் பெறுமதி 190 ரூபாவாக இருந்தது. எனினும், தற்போது 300 ரூபாவை நெருங்கியுள்ளது. இதற்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டும்” – என்றார்.