உக்ரைனில் தலைதூக்குவது நாசிசம்? : சண் தவராஜா
உக்ரைன் நாட்டின் மீதான படையெடுப்புக்கு ரஸ்யா தெரிவித்த காரணங்களுள் ஒன்று அந்த நாட்டை நாசிக்களின் பிடியில் இருந்து விடுவிப்பது. மனித குலத்திற்கே தீங்கான தத்துவமான நாசிசம் தொடர்பான அந்தக் குற்றச்சாட்டை மேற்குலக ஆதரவு ஊடகங்கள் கவனத்திலேயே கொள்ளவில்லை. 2014இல் உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாள் முதலாக நாசிக்களின் ஆதிக்கம் அந்த நாட்டில் அதிகரித்து வருகின்றமை பற்றிப் பல்வேறு வழிகளிலும் பேசப்பட்டாலும் அவை ‘மேற்குலக ஜனநாயகவாதி’களின் கரிசனைக்குரிய ஒன்றாக இன்றுவரை தென்படவில்லை. மாறாக, அவை கண்டும் காணமலும் விடப்படுவது மட்டுமன்றி, ஒருசில ஊடகங்களில் பேசப்பட்டாலும் அவை ‘நிராகரிக்கத்தக்க சிறிய விடயங்களாக’க் காட்சிப்படுத்தப்பட்டே வந்துள்ளன. வெளியில் இருந்து வந்த விமர்சனங்கள் மாத்திரமன்றி, உள்ளூர் மனித உரிமை அமைப்புகள், எதிர்க் கட்சிகள் என்பவற்றின் குரல்களும் கூட இது தொடர்பில் கண்டு கொள்ளப்படவில்லை.
தற்போதைய ரஸ்யப் படையெடுப்பின் பின்னான காலப்பகுதியில் ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் உக்ரைன் அரசாங்கம் மனித உரிமைகளின் ஒட்டுமொத்தக் காவலன் போலவும் ரஸ்யா மிக மோசமான மனித உரிமை மீறல்வாதி போலவும் உருவகப்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
ஆனால், நடப்பு நிகழ்வுகள் இந்த உருவகத்துக்கு முரணான வகையில் உள்ளதைப் பார்க்க முடிகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாகப் பல சம்பவங்கள் உள்ளன. அதிலொன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியான நாடோடி மக்கள் தொடர்பான காணொளி. போலந்து எல்லையோர நகரான ல்விவ் இல் சிந்தி மற்றும் ரோமா இன நாடோடி இனத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் ஒருசிலர் தெரு விளக்குக் கம்பங்களில் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற காட்சிகள் வெளியாகி இருந்தன. அதேவேளை அவர்களின் முகங்கள் நீலம் மற்றும் பச்சை வண்ணங்கள் பூசப்பட்டுக் காணப்பட்டன. அது மாத்திரமன்றி, சம்பவ இடத்தில் உக்ரைன் ஆயுதப் படையினர் நிற்பதையும் அவதானிக்க முடிந்தது.
பேருந்து ஒன்றில் திருட முனைந்தவேளை அவர்கள் பிடிக்கப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது. உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ரோமா இனத்தவர்கள் பசி காரணமாக உணவுப் பொருட்களைத் திருட முனைந்தபோது அவர்கள் பிடிக்கப்பட்டார்கள் என மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது. காரணம் எதுவாக இருந்தாலும் அவர்கள் ஏன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படாமல் தெருக் கம்பத்தில் கட்டப்பட்டார்கள்? வீதியால் வருவோர், போவோர் எல்லாம் அவர்களை அடிப்பதற்கு அங்கீகாரம் வழங்கியது யார்? அந்தப் பகுதியில் உள்ள அரச படையினர் இதனைத் தடுப்பதற்கு ஏன் முனையவில்லை? இதனைப் போன்ற பல கேள்விகள் உள்ளன. இவற்றுக்கான விடைகளைத் தெரிந்து கொள்ள 8 வருடங்கள் பின்னோக்கிச் செல்லவேண்டி உள்ளது.
2014இல் விக்ரர் யனுக்கோவிச் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்ட நாள் முதலாக உக்ரைனில் தீவிர வலதுசாரிகளின் எழுச்சி அவதானிக்கப்பட்டு வருகின்றது. அவற்றுள் Azov Battalion என அழைக்கப்படும் நவீன நாசிக் குழுவானது ஆரம்பம் முதலே நாடோடி இன மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. 2018இல் சேர்னிஹிவ் நகரில் நடைபெற்ற சம்பவமொன்றில் ரோமா இனத்தவர் ஒருவர் இதேபோன்று வீதியோர மின்கம்பம் ஒன்றில் கட்டப்பட்டிருந்தார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னம் ஒன்றைச் சேதப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அசொவ் குழு உறுப்பினரான Oleksandr Tarnavskyi என்பவர் இது தொடர்பான காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். ரோமா இன நாடோடி மக்களுக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ச்சியாகத் தெரிவித்துவரும் இவர், தடைசெய்யப்பட்ட நாசிக்களின் பாணியிலான சல்யூட் செய்யும் காணொளியையும் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Azov Battalion போன்ற பல தீவிர வலதுசாரிக் குழுக்கள் உக்ரைனில் செயற்பட்டு வருகின்றன. இவை முற்றுமுழுதாக அரசாங்கத்தின் முழுமையான ஆதரவுடனேயே செயற்பட்டு வருகின்றன. 2018இல் முன்னாள் அரசுத் தலைவர் பீற்றர் புரஷென்கோ அவர்களால் உருவாக்கப்பட்ட ‘தேசிய துணைப்படை’யானது குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்குடனான வீதி ரோந்துகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சி14 என அழைக்கப்படும் மற்றொரு தீவிர வலதுசாரி அமைப்பு உக்ரைனில் வாழும் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் 2014 முதலே ஈடுபட்டு வருகின்றது. 2018இல் இவர்கள் நாடளாவிய அடிப்படையில் நாடோடி இனத்தவரின் கூடாரங்கள் மீது தீயிட்டுக் கொழுத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதாகப் பதிவாகி உள்ளது. மற்றொரு சம்பவத்தில், தலைநகர் கீவ்வில் குடியிருந்த ரோமா இன நாடோடிகளை வீட்டைவிட்டு வெளியேற்றிய இவர்கள் பின்னர் அவர்களது வீடுகளுக்குத் தீவைத்தனர்.
இந்தக் குழுவின் தலைவரான Yevhen Karas ரஸ்யப் படையெடுப்பின் பின்னரான காலப்பகுதியில் கூட்டமொன்றில் உரையாற்றும் போது இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் யேர்மன் நாசிகளின் கூட்டாளியாகச் செயற்பட்ட Stepan Bandera அவர்களைக் குறிப்பிட்டுச் சிலாகித்துப் பேசினார். பண்டெரா எவ்வாறு ரஸ்யர்களைக் கொல்வதில் ஆர்வம் காட்டினாரோ அதைப் போன்றே தானும் ரஸ்யர்களைக் கொல்வதற்கு ஆவலோடு காத்திருப்பதாகவும் அதற்காகவே மேற்குலகம் தமக்குத் தேவையான ஆயுதங்களைத் தந்திருப்பதாகவும் கராஸ் தெரிவித்திருந்தார்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இவை ஒருசில எடுத்துக்காட்டுகளே. 1930களில் யேர்மன் தெருக்களில் இதுபோன்றே யூத மக்களுக்கு எதிரான கொடுமைகளை நாசிக்கள் அரங்கேற்றி இருந்தனர். அன்றும் கூட இந்தக் கொடுமைகளுக்கு ரோமா இன நாடோடி மக்களும் இலக்காகி இருந்தனர். யூதர்களுக்கும், நாடோடி மக்களுக்கும் எதிராகவே அனைத்தும் நடக்கின்றன எனவே ஏனையோருக்குப் பாதிப்பு எதுவும் இல்லை என அன்றைய உலகம் கவலை கொள்ளாமல் இருந்ததன் விளைவை பின்னாளில் கண்டு விக்கித்துப் போனது. அது போன்ற வேண்டத்தகாத சம்பவங்கள் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் அதனைத் தட்டிக் கேட்கவேண்டிய, தடுக்க வேண்டிய பொறுப்பு மானுடத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
பூகோள நலன்கள், ரஸ்ய எதிர்ப்பு என்கின்ற அடிப்படையில் அமெரிக்காவும், மேற்குலகமும் இதுபோன்ற செயற்பாடுகளைக் கண்டும் காணாமலும் போகலாம். ஆனால், சக மனிதனை நேசிக்கும் ஒவ்வொருவரும் – நீங்களும், நானும் – தட்டிக் கேட்க வேண்டிய விடயம் இது என்பதே உண்மை