எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர் கைது – இந்தியக் கடலோரக் காவல் படை நடவடிக்கை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை படகுத்துறைமுகத்தில் இருந்து 14 நாட்டிக்கல் மைல் தொலைவில், கப்பலில் சென்று கடலோரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் ஒரு பைபர் படகை ஆய்வு செய்தனர். அப்போது அந்தப் படகு இலங்கை நாட்டைச் சேர்ந்த படகு என்றும் அதில் வந்தவர் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் சாந்தரூபன் (வயது 30) என்றும் தெரியவந்தது.
இதையடுத்து இந்திய எல்லையில் தடையை மீறி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினர் படகை கைப்பற்றி மீனவரை கைது செய்தனர்.கைது செய்த மீனவரையும், கைப்பற்றிய படகையும் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் செல்வராசுவிடம் ஒப்படைத்தனர். படகையும், இலங்கை மீனவரையும் அழைத்து வர கோடிக்கரை படகு துறைமுகத்திலிருந்து பைபர் படகு கடலோர பாதுகாப்புப் படை கப்பலை நோக்கி புறப்பட்டது.
மீனவரையும் மீன்பிடி படகையும் கடலோர காவல் குழும ஆய்வாளரிடம் இந்திய கடலோர காவல் படையினர் நடுக்கடலில் ஒப்படைத்தனர். இருப்பினும் இலங்கை மீனவரின் படகில் கடல் நீர் நிறைந்து படகின் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கிய நிலையில் இருந்ததால் படகை எடுத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது.
அதன் பிறகு மற்றொரு பைபர் படகு கோடிக்கரை துறைமுகத்திலிருந்து சென்று இலங்கை மீனவரின் படகை இழுத்துக்கொண்டு, ஆறுகாட்டுத்துறை படகு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இலங்கை மீனவர் மட்டும் கோடிக்கரை படகு துறைமுகத்திற்கு இரவு அழைத்துவரப்பட்டார்.
அழைத்து வரப்பட்ட இலங்கை மீனவர் சாந்தரூபனிடம் சுங்கத்துறை, கடலோர பாதுகாப்பு குழும காவல் போலீஸார், கடலோர காவல்படை அதிகாரிகள், மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.