திருவள்ளூர் ஆட்சியரகம் எதிரே 5 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியிருக்கும் பொது நூலகம் – பொதுமக்கள் வேதனை
திருவள்ளூர் ஆட்சியரகம் எதிரில் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பொது நூலகம் 5 ஆண்டுகளாக பயணற்று பூட்டிக் கிடப்பதாக பொது மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திருவள்ளூர் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 தேதி அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த வீரராகவ ராவ் தலைமையில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக பிவி ரமணா மற்றும் முன்னாள் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் வ வேணுகோபால் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.
சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களுடன் பொதுமக்களிடையே மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திருவள்ளூர் நகராட்சியின் 1-வது வார்டில் அமைந்த நேதாஜி தெருவில் இந்த நூலகம் செயல்பட்டு வந்தது.
கடந்த 5 ஆண்டுகளாக திருவள்ளூர் நகராட்சி பொது நூலகத்தின் செயல்பாட்டை பராமரிக்க தவறியதால் நூலகமானது பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நூலகத்திற்கு உள்ளே உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் பயனற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜான் வர்கீஸ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் தரப்பிலும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மேலும் இந்த நூலகத்தில் இருந்த ஏராளமான புத்தகங்கள் தற்போது மாயமான விஷயமும் தெரியவந்துள்ளது. இதனிடையே வருகிற ஏப்ரல் மாதம் 1-ம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் புத்தகத்திருவிழா நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆட்சியரகம் எதிரிலேயே 5 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் நகராட்சி நிதியில் வாங்கப்பட்ட புத்தகங்கள் பூட்டப்பட்ட பொது நூலகத்தில் கிடப்பதால் அதனை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.