ஐபிஎல் 2022: பெங்களூர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
15வது ஐபிஎல் தொடரின் 6வது போட்டியான இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதின.
மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வெறும் 128 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரியூ ரசல் 25 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் பெங்களூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி 20 ரன்களை கூட தாண்ட முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
இதனையடுத்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணி, பேட்டிங்கில் கடுமையாக திணறியது. அந்த முதல் மூன்று வீரர்களான டூபிளசிஸ் (5), அனுஜ் ராவத் (0),கோலி (12) ஆகியோர் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இதன்பின் களத்திற்கு வந்த டேவிட் வில்லே (18), சபாத் அஹமத் (27) மற்றும் ருத்தர்போர்ட் ஆகியோர் (28) ஆகியோர் ஓரளவிற்கு ரன் குவித்தாலும், யாருமே அதிரடியாக விளையாடாததால், பெங்களூர் அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
கடைசி ஓவரை ஆண்ட்ரியூ ரசல் வீச, அதை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் சிக்ஸரும், இரண்டாவது பந்தில் பவுண்டரியும் அடித்து பெங்களூர் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளது.
கொல்கத்தா அணி சார்பில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.